நன்றி குங்குமம் தோழி
உடலின் ஜீரண மண்டலத்தை முறையாக செயல்பட உதவும் பித்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவை சீராக இருந்தால்தான் நோய் எதிர்ப்பு மண்டலமும், ஜீரண மண்டலமும் சிறப்பாக செயல்படும். உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இவற்றில் எது ஒன்று அதிகமானாலும் உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக பித்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய உணவு முறையில் கவனம் தேவை.
உடல் சூட்டை அதிகரிக்கும் ஜங்க் மற்றும் துரித உணவுகள், தூக்கமின்மை, காபி, டீ அதிகம் எடுத்துக் கொள்வது, போதை பொருட்களின் பயன்பாடு ஆகியவை பித்த நீர் சுரப்பு அதிகரிக்க காரணங்கள் ஆகின்றன.உடலில் பித்தம் அதிகமாகும் பொழுது அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல், சருமத்தில் அரிப்பு, அதிகப்படியான தாகம் போன்றவை ஏற்படும். பசி எடுக்காது. வாய் கசப்பாக இருக்கும். தலை சுற்றல், பாத எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
இதற்கு எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவு அவசியம். கசப்பு தன்மை கொண்ட உணவுகளையும், இனிப்பு உணவுகளையும் எடுத்துக் கொள்வது உடலின் பித்தத்தின் அளவை குறைக்கும்.
அந்தவகையில், வெள்ளரிக்காய், பீன்ஸ், தேங்காய், தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, பால் போன்ற உணவுகள் நம் உடலின் பித்த நிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
கொத்துமல்லி தழை, எலுமிச்சை சாறு, வெந்தயம், சோம்பு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள பித்தம் குறையும்.
தேனுடன் இஞ்சி சேர்த்து, ஊற வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர, பித்தம் முற்றிலும் நீங்கும்.
ரோஜாப் பூவின் சாறுடன் சர்க்கரை, பால் கலந்து சாப்பிட பித்தம் குறையும்.
எலுமிச்சையை உணவில் சேர்த்துக் கொள்ள பித்தம் தொடர்பான உபாதைகள் நீங்கும்.
பட்டாணியை உணவில் சேர்த்துக் கொண்டால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் நீங்கும்.
பொன்னாங்கண்ணி கீரை, மிளகு, சுக்குப் பொடி குடித்தால் சரியாகும்.
சாம்பல் பூசணி சாப்பிட சிறுநீரை வெளியேற்றி பித்தக் காய்ச்சல் குணமாகும்.
மாம்பழச்சாறு, மாதுளை சாறு இவை பித்தத்தை குறைத்து நல்ல ரத்தம் ஊற வழி செய்யும்.
கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டையாக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பித்தம் கட்டுப்படும்.
வெங்காயச்சாறு, இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து அருந்திட பித்தம் குறைந்து, பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் நீங்கும்.
தொகுப்பு: மகாலட்சுமி
