×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

என் மகனுக்கு 10 வயதாகிறது. இப்போதும் உணவை ஊட்டிவிட்டால் மட்டுமே சாப்பிடுகிறான். இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? அவனைத் தானாகச் சாப்பிட வைப்பது எப்படி?
– கே.மருதமுத்து, செங்கல்பட்டு.

பிறந்ததிலிருந்து கடைப்பிடித்துவரும் பழக்கங்களால்தான் இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. தின்பண்டங்களைத் தானாக எடுத்துச் சாப்பிடவில்லையென்றால், அவன் கைகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா எனச் சோதியுங்கள். ஒருவேளை நரம்பு, தசை, எலும்பு போன்றவற்றில் பாதிப்புகள் இருந்தால் குடும்ப மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் சாப்பிட மறுப்பதற்கு விளையாட்டுத்தனமே காரணம். பிடிக்காத உணவை வற்புறுத்திக் கொடுப்பதால் அவன் அந்த உணவைத் தவிர்ப்பான்.

எனவே, முதலில் அவனுக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து அவனையே சாப்பிடப் பழக்க வேண்டும். உணவின் நன்மைகளை அவனுக்குப் புரியும்படி எடுத்துச்சொல்லலாம். மேலும், அவன் வயதில் உள்ள சிறுவர்களோடு அமர்ந்து சாப்பிடச் சொல்ல வேண்டும். நண்பர்கள் சாப்பிடுவதைப் பார்த்து அவனும் தானாகவே சாப்பிடத் தொடங்கி விடுவான்.

வீஸிங் பிரச்னை உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாமா? நரம்பில் ஊசி போட்டுக் கொள்ளலாமா?
– ஆர்.எஸ்.ஷோபனா.

கர்ப்ப காலத்தில் வீஸிங் பிரச்னை இருக்கும் பெண்கள் இன்ஹேலர் பயன்படுத்தினால் எந்தப்பிரச்னையும் இல்லை. நுரையீரலில் வரும் பிரச்னைதான் வீஸிங் என்பதால் அதற்காகப் பயன்படுத்தும் இன்ஹேலர் மற்றும் மருந்துகள் நுரையீரலில் மட்டுமே செயல்படும். அவை எந்தவகையிலும் உடல் முழுக்கப் பரவிச் சிக்கல்களை ஏற்படுத்தாது. அதனால் குழந்தைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இன்ஹேலர் மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை போன்ற எவையும் பயன்தரவில்லை எனில் நரம்பு ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இதற்குக் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனை அவசியம். முடிந்த அளவுக்கு இன்ஹேலர் பயன்படுத்துவதே நல்லது.

ரத்த நாளங்களில் (blood vessels) 60% அடைப்பு இருந்தாலும் ஆப்பரேஷன்(operation) அவசியமா?இல்லை மருந்து மாத்திரையிலேயும் டயட்டிலேயும் சரி பண்ணிவிடலாமா?
– நா.கருணாகரன், நாகர்கோவில்.

இதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. நான் முன்பே கூறியதுபோல் மற்ற முக்கிய உறுப்புகள் இரண்டு இருக்கும் உடலில் மூளை, இதயம், ஈரல் மற்றும் கருப்பை ஒன்று மட்டும் இருப்பது இதை உணர்த்தும்.

இதயமானது ஒரு தசையும் நாணும் இணைந்த ஒரு உறுப்பு, அதில் நான்கு அறைகள், ரத்த ஓட்டம் அந்த நான்கு அறை (chambers) வழியாகவும் செல்வதை ஒருவழிப்படுத்துவதற்கென்று சாதனங்கள் – வால்வுகள் (valves) உண்டு. அவை அசுத்த ரத்தம் உடலின் அனைத்து உறுப்புகளிலிருந்தும் இதயத்தை அடைந்து, அங்கிருந்து நுரையீரலினுள் நுழைந்து சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இதயத்தை அடைந்து ரத்தநாளங்கள் மூலமாக ஏனைய உறுப்புகளையும் அடைவதற்கு மிகவும் அவசியமாகிறது.

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அது தம் பணியைச் செய்ய பிராணவாயு (Oxygen) மற்றும் குளுக்கோஸ் (Glucose) அவசியமாகிறது. கையளவு இதயம் அவற்றை உடல் முழுவதும் தமனி (Arteries) எனப்படும் ரத்த நாளங்கள் மூலமாக அதை அனுப்பும். இதயம் தம் வேலையைச் செய்யவும் அதற்கு பிராணவாயு மற்றும் குளுக்கோஸ் தேவை. இவை இதயத்தில் உள்ள ரத்தநாளங்களின் வழியாக இருதயத்தின் தசையைச் சென்றடையும். இந்த கரோனரி ஆர்டரீஸ் (Coronary arteries) எனப்படும் ரத்தநாளங்கள் மிகவும் முக்கியமானவை.

நம் உடலின் வலது (Right coronary) மற்றும் இடது (left coronary) கரோனரி தமனிகள் உண்டு, இவற்றில் இடது கரோனரி தமனி மேலும் இரண்டு பெரிய கிளைகளாகப் பிரியும், இதயத்தின் முன் பக்கம் இறங்கும் ரத்தநாளத்தை ’இடது முன்புறமாக இறங்கும் தமனி’ (left anterior descending artery LAD) என்றும் இதயத்தைச் சுற்றி இறங்கும் மற்ற கிளை வட்டச்சுற்று தமனி (circumflex artery) என்றும் அழைக்கப்படும். இவற்றில் இடது முன்புறமாக இறங்கும் தமனிக்கு ( left anterior descending artery LAD) விதவைகளின் ரத்தநாளம் (widow’s artery) என்ற ஒரு பட்டப் பெயரும் உண்டு. காரணம் இதில் அடைப்பு ஏற்பட்டால் முன்பெல்லாம் உயிர் போவது உறுதி. எனவே நிறைய பெண்களை விதவையாக்கியதால் இந்தப் பெயர். இந்த மூன்று ரத்தநாளங்களும் மேலும் சிற்சில கிளைகளாகப் பிரிந்து குருதியைக் கொண்டு சேர்க்கும்.

இவை கொழுப்புப் படிந்து (Atherosclerosis) சிறியதாகும் பட்சத்தில் இதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும். அந்தத் தவிப்பே நெஞ்சு வலியாக (angina) உருவெடுக்கிறது. நீரிழிவு(Diabetes) நோய் இந்த ரத்தநாளங்கள் அடைபடும் படலத்தை அதிகபட்சம் அதிகமாகும். புகை பிடிப்பது இதய ரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் (arteriosclerosis) தன்மையை மிகவும் பாதிக்கும்.

கொழுப்பு படிவது நாளங்கள் எல்லாவற்றையும் பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும் (critical stenosis) பட்சத்தில் நெஞ்சுவலி மற்றும் மிகவும் குறுகினாலோ திடீரென்று ரத்த அடைப்பு ஏற்பட்டாலும் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது. இவை எத்தனை கிளைகளை பாதித்திருக்கிறது என்பது பொருத்து, ஒன்று, இரண்டு மற்றும் மூன்று நாளங்கள் அடைப்பு (single, double or triple vessel disease.) என்று கொள்வோம்.

நாளங்கள் 50% மேலே அடைப்பு இருந்தாலே சிகிச்சை தேவை. அவற்றிற்கு குறைவாக இருந்தால் உணவு மற்றும் மருந்தினால் குணப்படுத்தலாம். உணவில் கொழுப்பு மற்றும் உப்பைக் குறைத்து, நீரிழிவு நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைப்பது, கொழுப்பை குறைக்க மருந்து சாப்பிட்டு ஆரோக்கியமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை மிக முக்கியம். ஆக, இரண்டிற்கும் மேற்பட்ட நாளங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறுகி இருந்தால் மருந்தாலும், உணவாலும் கட்டுப்படுத்துவது கடினம். எந்த மருந்து எப்படி உதவுகிறது என்பதை மற்ற ஒரு இதழில் பார்க்கலாம்.குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ ஏஞ்சியோப்லாச்ட்டியோ (angioplasty) செய்து ரத்தஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்யவேண்டும்.

குழந்தைகள் விளையாடுவதற்கு மொபைல் போன் கொடுப்பதால் தூங்கும்போதும் டச் போனில் விளையாடுவதுபோல் கைகளை அசைத்தபடி இருக்கின்றனர். கைப்பேசி பயன்படுத்துவதைத் தடை செய்தால் அழத் தொடங்குகின்றனர். அதற்கு என்னதான் செய்வது?

– தி.சூடாமணி, நீடாமங்கலம்.

அதிக நேரம் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அதன் நிகழ்வுகள் தூக்கத்தில் வெளிப்படத்தான் செய்யும். இன்றைக்குக் குழந்தைகளுக்கு அந்த நிலை அதிகம் ஏற்படுகிறது என்றால் அதற்கான முக்கியக் காரணம் பெற்றோரே. பொழுதுபோக்கிற்காகவும் தன்னுடைய அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்காகவும் கைப்பேசிகளை வாங்கிக் கொடுத்துக் குழந்தைகளின் ஆரோக்கியம் கெடச்செய்கிறார்கள். இது அவர்களின் இயல்பான மனநிலையைப் பாதிக்கிறது. முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்கள் சொல்லும் கதைகள்தான் பொழுதுபோக்கு. ஆனால், இன்று எந்த வீடுகளிலும் முதியவர்கள் இல்லாததால், அவர்களின் இடத்தைத் தொழில் நுட்பங்கள் ஆக்கிரமித்துவிட்டன.

மொபைல் போன் மட்டுமல்ல, கார்ட்டூன்களையும்கூட அதிக நேரம் பார்த்தால் அந்த நிகழ்வுகள் தூக்கத்தில் கனவாக வருவது இயல்பே. உடற்பயிற்சி மேற்கொள்வதுதான் இதற்குச் சரியான தீர்வு. முன்பு நொண்டி, கபடி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை இந்த மாதிரியான மனஉளைச்சல் ஏற்படாமல் இருக்கத்தான் விளையாடினார்கள். ஆனால், இன்று மனஉளைச்சல் ஏற்படுத்துவதைத்தான் விளையாடக் கொடுக்கிறோம்.

அதுமட்டுமல்ல, அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு வராமல், வீட்டுக்கு வந்தும் அதை கைப்பேசிகளின் வழியாகக் கவனித்துக் கொண்டிருப்பதால், அதைப் பார்க்கும் குழந்தைகளும் கைப்பேசியை உற்றுநோக்கப் பழகுகின்றனர். அதன் விளைவு அவர்களது தூக்கத்தில் தெரிகிறது.

லேப்டாப்பில் நீங்கள் எந்நேரமும் தீவிரமாக இருக்கும்போது குழந்தைகள் வந்து `அம்மா, அப்பா’ என அழைத்தால் நீங்கள் கோபம் கொள்வதுபோலத்தான் அவர்களிடமிருந்து நீங்கள் கைப்பேசியைப் பிடுங்கும்போதும் அவர்கள் கோபம் கொண்டு அழுகிறார்கள்.

எனவே, குழந்தைகளை இந்த நிலையிலிருந்து மாற்ற அவர்களை நீச்சல், சிலம்பம் போன்ற உடலுழைப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சேர்க்கலாம். சமூக நிகழ்வுகளில் ஈடுபடச் செய்யலாம். மருத்துவரீதியாக இதற்குப் பெரியளவில் தீர்வுகள் கிடையாது. ஒருசில குழந்தைகள் இம்மாதிரியான செயல்களில் தீவிரமாக இருந்தால் அருகிலுள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். அவர்கள் தரும் கவுன்சலிங் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

தொகுப்பு: மருத்துவப் பேராசிரியர் முத்தையா

Tags : Q. Maruthamutu ,Chengalpattu ,
× RELATED தினசரி பழக்கவழக்கங்கள் தரும் இயன்முறை மருத்துவ நோய்கள்!