- T20 உலக கோப்பை
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- கொழும்பு
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
- ஐசிசி
கொழும்பு: வரும் பிப்ரவரி 15ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், பாகிஸ்தான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர்.
நேற்று ஐசிசி அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கோரிக்கைகளை வலியுறுத்தியது.
குறிப்பாக, ஐசிசி வருவாய் மாதிரியில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் பங்கினை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும், இந்தியாவுடன் நீண்டகாலமாக தடைபட்டுள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை மீண்டும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பில் கோரப்பட்டுள்ளது.மேலும் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்பதை அவர்கள் நிபந்தனையாக விதித்துள்ளனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை நிறுத்திவிட்டது. மேலும், 2025 ஆசியக் கோப்பையிலிருந்து பாதுகாப்பு மற்றும் கொள்கை ரீதியான காரணங்களால் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் தவிர்த்து வருகின்றனர்.
உலகக்கோப்பைத் தொடரின் மிகப்பெரிய வருவாய் ஈட்டித் தரும் இந்தப் போட்டியை எப்படியாவது நடத்தி முடிக்க ஐசிசி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

