×

பாஜவில் இருந்து ஓரங்கட்டப்படுவதால் அண்ணாமலை தனிக்கட்சி நற்பணி மன்றம் ஆலோசனை

 

பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மாநில தலைவராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியில் அவரது முக்கியத்துவம் குறைந்து விட்டது. அவருக்கு உயர்மட்ட பொறுப்பு வழங்கப்படும் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் முட்டல் மோதல் அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது முக்கியத்துவத்தை குறைக்கும் விதமாக 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் தான் மூக்குடைபட்டதாக கொந்தளித்த அண்ணாமலை அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், தனது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபடப்போவதில்லை என்றும் தடாலடியாக அறிவித்தார்.

இதற்கிடையில் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு நெல்லையை தலைமை இடமாக கொண்டு அண்ணாமலை நற்பணி மன்றத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் துவக்கி சமுக பணியாற்றி வருகின்றனர். இதன் நிறுவன தலைவராக நெல்லையை சேர்ந்த வேல்கண்ணன் செயல்படுகிறார். இதனால் அண்ணாமலை தனிக்கட்சி துவங்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் அனலடித்தது.

அப்போது, இதுகுறித்து பேசிய அண்ணாமலை, ‘தன் மீதான அபிப்ராயத்தால் இதுபோன்ற அமைப்பை துவங்கியுள்ளதாகவும், தனக்கு இதில் துளியும் விருப்பமில்லை’ என்றும் கூறினார். இதனால் நற்பணி மன்றத்தின் செயல்பாடு சிறிது காலம் மந்தமானது. இந்நிலையில் சமீபகாலமாக கட்சியிலிருந்து அண்ணாமலை ஓரங்கட்டப்படுவதாக தகவல்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவந்த நிலையில் நெல்லை அரியகுளம் பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலை நற்பணி மன்ற தலைமை அலுவலகத்தில் நேற்று மாநில தலைவர் வேல்கண்ணன் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து நற்பணி மன்ற மாநில தலைவர் வேல்கண்ணன் அளித்த பேட்டி: அண்ணாமலை நற்பணி மன்றம் அரசியல் சாராத அமைப்பு. மன்றத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள், கர்நாடகா, புதுச்சேரி மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தலைவர் அண்ணாமலை எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நற்பணி மன்றம் சார்பில் தேர்தல் பணியாற்றி அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச்செய்வோம். நாங்குநேரி, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட நற்பணி மன்றம் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்படும். சமூக, மக்கள் சேவை செய்வதே எங்கள் நோக்கம். தேர்தலில் நற்பணி மன்றம் போட்டியிடாது. அதே நேரத்தில் தலைவர் அண்ணாமலை எத்தகைய முடிவு எடுத்தாலும் அவருக்கு நற்பணி மன்றம் துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Annamalai Independent Party Charity Council ,BJP ,Annamalai ,Nainar Nagendran ,MLA ,
× RELATED பெண்கள் குறித்து இழிவான பேச்சு; அதிமுக...