சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டியில் வரும் 13ம் தேதி விஜய் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு மாநகர் போலீஸ் அனுமதி அளித்துள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்தை, வரும் 13ம் தேதி நடத்த அனுமதி கேட்டு மகுடஞ்சாவடி ஒன்றிய செயலாளர் கார்த்தி கடந்த 2ம் தேதி, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். தவெகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், தெற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரசன்னா பாலாஜி மற்றும் நிர்வாகிகள், கடந்த 4ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
இந்நிலையில், சேலம் சீலநாயக்கன்பட்டியில் வரும் 13ம் தேதி நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதுகுறித்து மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் கூறுகையில், ‘சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள கேவிபி கார்டனில், வரும் 13ம் தேதி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது.
மக்கள் சந்திப்பு கூட்டமோ, மற்ற கூட்டமோ நடத்தப்படவில்லை. சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தியம், வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்பார்கள். அடுத்த மாதம் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும். அதற்கான அனுமதி கடிதம் போலீசில் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் 51 நெறிமுறைகளை அளித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படும்,’ என்றார்.
