×

திருவள்ளூர் அருகே பரபரப்பு; கூவம் ஆற்றில் 3 கற்சிலைகள் மீட்பு: வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சத்தரை கிராமத்தில் செல்லும் கூவம் ஆற்றில் 3 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கூவம் ஆற்றில் இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் பழங்கால 3 கற்சிலைகள் ஆங்காங்கே கிடப்பது கண்டு உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவல் பரவியதும் சத்தரை, கடம்பத்தூர், மப்பேடு, கீழச்சேரி, கூவம், பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் தாசில்தார் பாலாஜி உத்தரவின்படி, வருவாய்துறை அதிகாரிகள் சென்று கூவம் ஆற்றில் ஆய்வு செய்து ஆங்காங்கே கிடந்த சுமார் 3 முதல் 4 அடி உயரம் கொண்ட பழங்கால கற்சிலைகளை மீட்டனர். பின்னர் அந்த சிலைகளை திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள காப்பகத்தில் பத்திரமாக வைத்தனர்.

இந்த சிலைகளின் பெயர் என்ன, எந்த காலத்து சிலைகள் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இவற்றை ஆய்வு செய்த பின்னர்தான் கற்சிலையின் ஆண்டுகள் தெரியவரும் என்று தாசில்தார் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கூவம் ஆற்றில் 50 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் கூவம் ஆற்றில் மேலும் சிலைகள் இருக்கலாம் என்று தெரிகிறது.

Tags : Tiruvallur ,Coovum river ,Sattara ,Sattara, Kadambattur ,
× RELATED திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக...