- தேவாக்
- செங்கோட்டையன்
- தேவாக் தேர்தல் அறிக்கை குழு
- கருமத்தம்பட்டி
- கோயம்புத்தூர் மாவட்டம்
- பொதுச்செயலர்
- அருண்ராஜ்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக நிகழ்ச்சியில் நடந்த அரங்கில் இருந்த பேனரில் அக்கட்சி தலைவர் விஜய் புகைப்படம் மட்டுமே இருந்தது.
இதேபோல கட்சி நிர்வாகிகள் சார்பில் வெளியே வைக்கப்பட்டு இருந்த பேனர்களிலும் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அதேசமயம் அக்கட்சியின் உயர் மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்ட அமைப்பு செயலாளருமான செங்கோட்டையனின் புகைப்படம் எந்த பேனரிலும் இடம்பெறவில்லை. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
9 முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகித்த மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனின் சொந்த மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்கு மண்டல மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் செங்கோட்டையன் புகைப்படங்கள் முழுமையாக தவிர்க்கப்பட்டு இருந்ததும், நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்ததும் கட்சியில் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏற்கனவே கட்சியில் செங்கோட்டையனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் உள்ள நிலையில், செங்கோட்டையனின் புறக்கணிப்பு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
* குழுவிலேயே செங்ஸ் கிடையாது: தவெக அருண்ராஜ் அதிரடி
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் அளித்த பேட்டியில், தே.ஜ. கூட்டணி என்பது முழுக்க முழுக்க பாஜவால் உருவாக்கப்பட்டது. உண்மையான தலைமை டெல்லியில்தான் இருக்கிறது.
பல்வேறு அழுத்தங்களால் தான் அதில் பலரும் இணைகின்றனர். அதிமுகவினர் யாரும் அந்த கூட்டணியில் வந்து சேரவில்லை. டெல்லி சொன்னதால் வந்து சேர்ந்து இருக்கின்றனர்’’ என்றார். செங்கோட்டையன் இல்லாமல் மேற்கு மண்டலத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தபடுவது குறித்த கேள்விக்கு, ‘‘ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி குழுவாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இது தேர்தல் அறிக்கைக்கான குழு. செங்கோட்டையன் பிரசார குழுவிற்கு பொறுப்பாளராக இருக்கிறார். இதுபோல தேவையில்லாமல் பிரச்னைகளை கிளப்ப முயற்சிக்க வேண்டாம்’’ என பதிலளித்தார். தவெக பேனர்களில் செங்கோட்டையன் படம் இடம்பெறாமல் இருப்பது குறித்து கேள்விக்கு, ‘‘அதெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை. ஒவ்வொரு கமிட்டியிலும் ஒருவர் இருப்பார். அவ்வளவுதான்’’ என கூலாக பதிலளித்தார்.
