×

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்கா விதித்த இந்தியா மீதான 25% வரி ரத்து: மோடி அரசு மீது காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு

 

*இருதரப்பு வரிச்சலுகையுடன் கூடிய புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

புதுடெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% வரி ரத்தான நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீதம் தண்டனை வரியைச் சுமத்தியிருந்தது. இதனால் இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கான மொத்த வரி சுமார் 50 சதவீதமாக உயர்ந்து, வர்த்தக ரீதியாக இந்தியா பெரும் பின்னடைவைச் சந்தித்து வந்தது.

இந்த வரி உயர்வால் இந்தியத் தயாரிப்புகள் அமெரிக்கச் சந்தையில் கடும் விலைப் போட்டியைச் சந்தித்ததுடன், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயிலும் தாக்கம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த பல மாதங்களாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இதற்கான அதிரடி உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, இந்தியா மீதான 25 சதவீதம் தண்டனை வரி ரத்து செய்யப்பட்டு, மொத்த வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமானது இன்று அதிகாலை 12.01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உலகச் சந்தையில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது. குறிப்பாக எரிசக்தி, விமானப் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெருமளவிலான கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு ஈடாக அமெரிக்கா தனது இறக்குமதி வரியைக் குறைத்துள்ள நிலையில், இந்தியாவும் அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரியைப் படிப்படியாகப் பூஜ்ஜியம் சதவீதம் வரை குறைக்கச் சம்மதித்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின்படி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தவோ அல்லது பெருமளவு குறைக்கவோ இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக, அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளில் இருந்து தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின்படி, இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால், ‘ரத்து செய்யப்பட்ட தண்டனை வரி உடனடியாக மீண்டும் விதிக்கப்படும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து கண்காணிப்பு முறையை ஏற்படுத்த உள்ளன.

இந்த ஒப்பந்தத்தால் மருந்துப் பொருட்கள், வைரங்கள் மற்றும் விமான உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்குப் பூஜ்ஜியம் சதவீத வரி விதிக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஜவுளி, தோல் பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகளுக்கு 18 சதவீத வரி மட்டுமே இனிமேல் வசூலிக்கப்படும். அதே நேரத்தில், இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பால், கோழி இறைச்சி மற்றும் தானியங்கள் போன்ற உணர்திறன் மிக்க விவசாயத் தயாரிப்புகளுக்கு இந்தியா தனது வரிப் பாதுகாப்பைத் தொடர்ந்து நீட்டித்துள்ளது. தொழில்நுட்பத் துறையில் அதிநவீன கம்ப்யூட்டர் பாகங்கள் மற்றும் தரவு மைய உபகரணங்களை வாங்கவும், விமானப் போக்குவரத்துத் துறையில் போயிங் நிறுவனத்திடம் இருந்து சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்கள் மற்றும் இன்ஜின்களை வாங்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்த ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்தை கொண்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான முழுமையான சட்டப்பூர்வ ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாக உள்ளது. இந்த அதிரடி வரிக் குறைப்பு காரணமாக, அண்டை நாடுகளான வியட்நாம், வங்கதேசம் மற்றும் சீனாவை விட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உலகச் சந்தையில் அதிக சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 34 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவிற்கு 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் இந்த வரிச் சலுகை அமலுக்கு வந்துள்ளதால் இந்திய வர்த்தக வட்டாரங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

டிரம்புக்கு நன்றி தெரிவித்த மோடி
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இந்த அறிவிப்பு சிறந்த செய்தியாகும். இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒப்பந்தம் நமது கூட்டாண்மையின் ஆழம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இந்த ஒப்பந்தமானது கடினமாக உழைக்கும் விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் மீனவர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதன் மூலம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்தும்.

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். புதுமைகளை ஊக்குவிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. இந்த கட்டமைப்பு இரு நாடுகளுக்கு இடையிலான முதலீடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும். விக்சித் பாரத் எனப்படும் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி இந்தியா முன்னேறி வரும் வேளையில், எதிர்காலத்தை நோக்கிய உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா விரித்த வலையில் சிக்கிய இந்தியா
காங்கிரஸ் மூத்த எம்பி ஜெயராம் ரமேஷ் கூறுகையில், ‘ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய வர்த்தக கட்டமைப்பானது, இந்தியாவை பொறியில் சிக்க வைக்கும் செயலாகும். தேசிய நலனை விட வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணிந்து எடுக்கப்பட்ட முடிவாகும். புதிய ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளது. மீறினால் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது.

சோயாபீன் எண்ணெய், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்ற மானியம் வழங்கப்பட்ட அமெரிக்க விவசாயப் பொருட்களை, இறக்குமதி வரி குறைப்பு மூலம் இந்திய சந்தையில் குவித்து நம்முடைய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த ஒப்பந்தம் சீர்குலைக்கிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 3 மடங்கு அதிகரிக்கும் என்பதால், இந்தியாவின் வர்த்தக லாபம் அழியும் அபாயம் உள்ளது. ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்’ என்றார்.

Tags : India ,United States ,Russia ,Modi government ,NEW DELHI ,
× RELATED அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு...