ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகின்றனர். அந்த வகையில் கொரோனா போன்ற பெருந்தொற்றை நாம் ஏற்கெனவே எதிர்கொண்டுள்ளோம். இருப்பினும், சிலர் அஜாக்கிரதையுடன் செயல்பட்டு வருவதால், அவர்களது அறியாமை காரணமாக நோய்த் தொற்றுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். எனவே, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் அதனால் உண்டாகும் நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது.
அந்த வகையில், தற்போது மழைக்காலம் முடிந்து, பொதுமக்கள் படிப்படியாக நோய்த் தொற்றுகளில் இருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெங்கு, சிக்கன் குனியா போன்ற பாதிப்புகள் பல்வேறு இடங்களில் அதிகரித்துள்ளதாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. தற்போது பகல் நேரங்களில் வெயில் அதிகரித்து வருவதால், கொசுத் தொல்லையும் ஓரளவு குறைந்து வருகிறது. இந்நிலையில், திடீரென ‘பறவைக் காய்ச்சல் என்ற புதிய தொற்று சென்னையில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடையாறு இந்திரா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த மாதம் 5ம் தேதி முதல் சில இடங்களில் காகங்கள் ஆங்காங்கே கீழே விழுந்து உயிரிழந்தன. இதை சாதாரண நிகழ்வாக பொதுமக்கள் எண்ணினர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல காகங்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவரம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பரிசோதனை மேற்கொண்டது.
மேலும் துல்லியமாக கண்டறிய, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இறந்த காகங்களின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில், சென்னை அடையாறு பகுதியில் உயிரிழந்த காகங்களில் எச்5என்1 (பி5ழி1) ஏவியன் இன்ஃப்ளூயன்சா எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நோய் காகங்கள் மட்டுமின்றி, கோழிகள் உள்ளிட்ட பிற பறவைகளுக்கும் பரவக்கூடும் என்றும், அதன் மூலம் மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சில இடங்களில் காகங்கள் உயிரிழப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சல் என்பது கோழிகள் மற்றும் பிற பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றுப் பரவ வாய்ப்புள்ள நோயாகும். பாதிக்கப்பட்ட பறவைகளின் கழிவுகள் மூலம் மனிதர்களுக்கும் நோய் பரவலாம். மேலும், பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலம் பரவும் வாய்ப்பும் உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படலாம் என அறிவுறுத்தியுள்ளது. பறவைகள் இறந்து கிடந்தால், அருகிலுள்ள கால்நடை மருத்துவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது; கோழிப் பண்ணைகள் கழிவுகளை பொதுவெளியில் கொட்டக் கூடாது. பண்ணைக்குள் வெளி ஆட்கள் மற்றும் பறவைகள் நுழைவதைத் தடுக்க வேண்டும். கோழி மற்றும் கோழி இறைச்சிகளை எல்லை தாண்டி எடுத்துச் செல்லக் கூடாது. போன்ற பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
* மருத்துவர்களின் ஆலோசனை
பெரம்பூரைச் சேர்ந்த சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘பொதுவாக பணிக்காலம் என்றால் சிலருக்கு லேசான சலி மற்றும் காய்ச்சல் வருவது இயல்பு. அவர்கள் கடைகளில் மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டு இரண்டு மூன்று நாட்கள் கூட வீட்டில் இருந்து விடுவார்கள். தற்பொழுது பல இடங்களில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா பாதிப்புகள் உள்ளன.
இதில் தற்போது சென்னையில் பறவை காய்ச்சல் அறிகுறிகளும் காணப்படுகிறது. மேலும், தற்போது பனிக்காலத்தில் இருந்து வெயில் காலத்திற்கு மாறும் சூழ்நிலை உள்ளது. தட்பவெட்ப நிலைகளும் மாறுகின்றன. எனவே சாதாரண காய்ச்சல் என்றால் கூட பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கண்டிப்பாக ரத்த பரிசோதனை செய்து அது எந்த வகை காய்ச்சல் என்பதை கண்டறிந்து அதற்கு உண்டான மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்களிலிருந்து நாம் விடுபடலாம். தன்னிச்சையாக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் குறிப்பிட்ட அந்த நோய்களின் தாக்கம் அதிகரித்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்’’ என்றார்.
* எப்போது தோன்றியது
பறவைக் காய்ச்சல் 1997ம் ஆண்டு இது பெரிய அளவில் பதிவானது. ஹாங்காங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் பல நாடுகளில் தொடர்ச்சியாக சம்பவங்கள் கண்டறியப்பட்டன..
* அறிகுறிகள்
பறவைகளின் கழிவுகள் மூலம் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. அதிக காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், தலைவலி, உடல்வலி, சோர்வு, சிலருக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
* தடுப்பு நடவடிக்கைகள்
கோழி இறைச்சியை நன்கு வேகவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். முட்டைகளை முழுமையாக சமைத்து பயன்படுத்த வேண்டும். அரைவேகவைத்த சிக்கன் உணவுகள் மற்றும் முழுமையாக வேகாத முட்டை கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
