குஜராத்தில் செயற்கை பால் தயாரித்த தொழிற்சாலை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கு டிடெர்ஜென்ட் பவுடர், யூரியா உரம், காஸ்டிக் சோடா, பாமாயில், சோயாபீன் ஆயில், புரோட்டீன் பவுடர், பால்பவுடர் ஆகியவற்றை வைத்து போலியாக பால் தயாரித்துள்ளனர். இதன்மூலம் 300 லிட்டர் பாலை, 1,800 லிட்டராக்கியுள்ளனர். இதனை பாக்கெட்களில் அடைத்து பல்வேறு கிராமங்களுக்கும் சப்ளை செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்காந்தா மாவட்டத்தில் தான் இந்த தொழிற்சாலை இயங்கியுள்ளது.
உண்மையான பாலின் நிறம், திடம், நுரை பொங்கும் தன்மை போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கண்ட அபாயகரமான பொருட்களை கலந்து செயற்கையாக ரசாயன பாலை உருவாக்கியுள்ளனர். இந்த தொழிற்சாலையில் இருந்து 1,962 லிட்டர் கலப்பட பால், 1,100 லிட்டருக்கும் மேலான மோர், சுமார் ரூ.71 லட்சம் மதிப்பிலான, கலப்படத்துக்கு பயன்படுத்தப்பட்ட டிடெர்ஜென்ட், யூரியா உள்ளிட்டவற்றை உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.
இதுபோல், கோலிபார்ம் பாக்டீரியா பிரபல பால் உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்யும் தயிர்களில் உள்ளது தெரிய வந்தது. அனுமதிக்கப்பட்டதை விட 2,100 மடங்கு அதிக கோலிபார்ம் பாக்டீரியா, 60 மடங்கு அதிக ஈஸ்ட் உள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாகவும், பெண்கள் ஆரோக்கியமான அழகு மற்றும் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தும் மஞ்சள் தூளில், வண்ணத்தை கூட்ட ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது, தேசிய மருத்துவ நூலக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை கட்டிகளை ஏற்படுத்தும் மெட்டானில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டுள்ளது. செற்கை சாயமான இது சோடியம் பென்சென்சல்போனேட் என பரவலாக அறியப்படுகிறது. பென்சென்சல்போனிக் அமில சோடியம் உப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது, இது தோல், காகிதம் மற்றும் சோப்புக்கு சாயமிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனை மஞ்சளில் கலப்படம் செய்ததன் மூலம் மரபணு மாற்றம் மற்றும் புற்றுநோய் அபாயத்தை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோல் ராஜஸ்தானில் காளிபிளவர் மற்றும் கீரை பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரில் அதிக உலோகத்தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இது சிறுநீரகம், கல்லீரலை பாதிப்பதோடு, புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடியது. குஜராத், உ.பி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களில் தான் கலப்பட பால் உள்ளிட்ட மோசமான உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் மோசடிகள் அரங்கேறுகின்றன. ஆனால், இது தொடர்பாக கண்காணிக்க வேண்டிய ஒன்றிய அரசும்,ஒன்றிய சுகாதாரம், குடும்ப நலத்துறை மற்றும் ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மவுனமாக இருப்பது, மக்களின் நலனில் ஒன்றிய பாஜ அரசு வைத்துள்ள அக்கறையை கேள்விக்குறியதாக்குவதாக சமூக ஆர்வலர்கள், உணவுத்துறை நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு
குஜராத்தில் கேள்விக்குறி
சமீபத்திய புள்ளி விவரத்தின்படி, குஜராத்தில் உணவு தர பரிசோதனையில் 8.3 சதவீதம் தர நிலையை பூர்த்தி செய்யவில்லை என தெரிய வந்துள்ளது. ஆண்டு வாரியாக விவரம் வருமாறு:
ஆண்டு மாதிரி
பரிசோதனை தரமற்றவை சதவீதம்
2021-22 13,663 824 6.03%
2022-23 14,562 978 6.72%
2023-24 15,841 910 5.74%
2024-25 4,316 360 8.3%
* உற்பத்தியில் முதலிடம் கலப்படமும் அதிகம்
நாட்டின் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. இதன் பங்களிப்பு 16.21 சதவீதம், அடுத்ததாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் 8.91%., குஜராத் 7.65%, மகாராஷ்டிரா 6.71%. மாநிலங்கள் உள்ளன. உத்தரபிரதேசத்தில் கடந்த 2024-25ல் நடந்த பெரிய அளவிலான ரெய்டில் 4,000 லிட்டர் கலப்பட பால், போலி பன்னீர் 750 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இவை டெல்லி, நொய்டா பகுதிகளில் சப்ளை செய்யப்பட்டுள்ளன. இதுபோல், மகாராஷ்டிராவிலும் போலி ரசாயன பால் பிடிபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
