×

மறுவரையறையில் காணாமல் போன திருவட்டாறு தொகுதி

தமிழக அரசியல் வரலாற்றில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகத் திகழ்ந்த திருவட்டார் சட்டமன்றத் தொகுதி, கடந்த 2008ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டு ஒரு நினைவாக மாறியது. அதன் பிறகு வரலாற்றில் மட்டுமே இந்த தொகுதி இடம் பெற்றுள்ளது. முதலில் பத்மநாபபுரம் தொகுதி நீக்கப்படுவதாக வரைவு பட்டியல் வெளியாகி இருந்தது. இதனை எதிர்த்து தொகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் கிளைமேக்ஸ் ஆக திருவட்டார் தொகுதி பறிபோனது, பத்மநாபபுரம் இடம் பெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்கள் தொகையின் சமநிலையைப் பராமரிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுவது வழக்கம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 2002-ல் அமைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் தமிழகத்தில் பல தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைத்தது.

இதன் விளைவாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த திருவட்டார் தொகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டது. திருவட்டார் தொகுதி நீக்கப்பட்டவுடன், அந்தத் தொகுதியின் கீழ் இருந்த பகுதிகள் அண்டை தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன. திருவட்டாரின் பெரும் பகுதிகள் பத்மநாபபுரம் தொகுதியோடு இணைக்கப்பட்டன.

சில பகுதிகள் கிள்ளியூர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டன. கூடுதல் பகுதிகள் சேர்க்கப்பட்டு குளச்சல் தொகுதி புதிய வடிவத்தைப் பெற்றது. திருவட்டார் தொகுதி 2006 வரை தமிழக சட்டமன்றத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இத்தொகுதி இடதுசாரி இயக்கங்களின் கோட்டையாகக் கருதப்பட்டது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சி இத்தொகுதியில் பலமுறை வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியின் கடைசி சட்டமன்ற உறுப்பினராக லீமா ரோஸ் (மார்க்சிஸ்ட்) பணியாற்றினார்.

Tags : Thiruvattar ,Kanyakumari district ,Tamil Nadu ,
× RELATED உழவன் கணக்கு பார்த்தால் ஒரு படி நெல்...