- பூம்புகார் நிறுவனம்
- அமைச்சர் தா.மோ.அன்பரசன்
- சென்னை
- பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு
சென்னை: பூம்புகார் கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்க விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: பூம்புகார் நிறுவனம், 7 உற்பத்தி நிலையங்கள் மற்றும் 25 விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டு காலத்தில் நேரடி விற்பனை, இணையதள விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றின் மூலம் ரூ.232 கோடியே 22 லட்சம் மதிப்பிலான கலை பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டின் கைவினை பொருட்களை உலக அளவில் கொண்டு செல்ல பூம்புகார் நிறுவனத்தின் மூலம் பூவிசார் குறியீடுகள் பெற்று வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, அரும்பாவூர் – மரச்சிற்பங்கள், தஞ்சாவூர், கருப்பூர் கலங்காரி – ஓவியங்கள், மாமல்லபுரம், மயிலாடி – கற்சிற்பங்கள், சுவாமிமலை பஞ்சலோக சிற்பங்கள், பத்தமடை பாய்கள் என 23 கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீட்டு பெற்று வழங்கப்பட்டுள்ளது. 10 கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீட்டு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைவினைக் கலைஞர்கள் தங்களின் கலைப் பொருட்களை விற்பனை செய்ய கன்னியாகுமரியில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பிலும், மாமல்லபுரத்தில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பிலும், நகர்ப்புற கண்காட்சி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பூம்புகார் நிறுவனமும், எம்எஸ்எம்இ துறையும் இணைந்து Micro cluster திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் ரூ.9 கோடியே 74 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மரச்சிற்ப குழுமமும், மல்லியக்கரையில் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காட்சி அரங்கம் மற்றும் செயல்முறை விளக்க மையப் பணிகளும், இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
