×

அனைத்து கட்சிகளுமே எங்களுக்கு ப்ரண்ட்லி தான் தேமுதிக கூட்டணியை எப்போது இறுதி செய்யும்? விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்து பிரேமலதா பரபரப்பு பேட்டி

சென்னை: 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியை தேமுதிக நேற்று தொடங்கியது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறும் முன், விஜயகாந்த் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வழிபாடு செய்தார்.

அதன் பின்னர் அவர் விருப்ப மனுக்கள் விநியோகத்தை தொடங்கினார். தொடர்ந்து வருகிற 12ம் தேதி மாலை 5 மணி வரை போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிரேமலதா அளித்த பேட்டி: கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். திமுக, அதிமுக என அனைவரும் அனைவரும் தேமுதிகவின் தோழமை கட்சிகள் தான்.

ஆனால் எங்க கட்சிக்கு மட்டும் ஒரு தனி பார்முலா, ஒரு வேர்ட் வெச்சிருக்கீங்க. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எல்லாருமே தோழமை கட்சிகள் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டேன். நண்பர்களாக எல்லாருமே எங்களோட வந்து பேசுகிறார்கள். எங்கள் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த முறை யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ; மக்களும் விரும்பும் ஒரு கூட்டணியை, தேமுதிகவும் விரும்பும் கூட்டணியை நிச்சயமாக இந்த முறை நாங்கள் அமைப்போம். ஒரு மகத்தான வெற்றியை இந்த தேர்தலில் பெறுவோம்.

அதேபோல தேமுதிக இடம்பெறும் அந்த கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அந்த மகத்தான ஒரு வெற்றிக் கூட்டணியை நிச்சயம் நாங்கள் கொண்டு வருவோம். அதை வந்து உரிய நேரத்தில் உங்களுக்கு நான் அறிவிக்கிறேன். இன்றைக்கு இருக்கிறது ஒன்று என்டிஏ கூட்டணி, இன்னொன்று திமுக தலைமையிலான கூட்டணி, இன்னொன்று தவெக விஜய் ஒரு பக்கம், சீமான் ஒரு பக்கம் எல்லாரும் தான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு எல்லாருமே கேப்டனுக்கும், தேமுதிகவுக்கும் ப்ரண்ட்லி தான். எல்லாருமே நட்புணர்வோட வந்து எங்களிடம் பேசுகிறார்கள். ஆனால் தேமுகவின் எதிர்காலத்திற்கும், எங்க கழகத்தின் எதிர்காலத்திற்கும் எது நல்லதோ, எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை உறுதியாக அமைப்போம். இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிப்புக்கு முன்னாடி எங்கள் கூட்டணியை நாங்கள் இறுதி செய்வோம்.

நான் எப்போதுமே யூகங்களுக்கு பதில் சொல்வது கிடையாது. என் வாயில் இருந்து வருகிற ஒரு வார்த்தை என்றால், அது அதிகாரப்பூர்வமாக இருக்கும், உண்மையானதாக இருக்கும். யூகங்களுக்கோ, அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க, யூ டியூப்பில் போனது, சமூக வலைதளத்தில் போனது என்று அதுக்கு எல்லாம் நான் எப்பவுமே பதில் சொல்கிறது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMDK ,Premalatha ,Chennai ,Koyambedu, Chennai ,Vijayakanth… ,
× RELATED சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது