சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் பதில் உரை ஆற்றாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது இதுதான் முதல் முறை. ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் – இந்திய பிரதமருக்கும் இடையான, உறவுகள் குறித்தும் இன்னும் பல பிரச்னைகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்புவார்கள் என்பதால், எதிர்கட்சியினர் பேசவிடாமல் தடுக்கும் யுக்தியை, ஆளும் கட்சியினர் கையாண்டனர். பிரதமர் பதில் உரையை ஆற்றாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு. இதற்கு பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொள் காட்டுவதாக கூறி, தனது உரையில், பிச்சை எடுக்க கூட பயன்படாத மொழி தமிழ் என்று தனது, காழ்ப்புணர்வை கக்கி உள்ளார். இது தான் பாஜவின் மணநிலை. தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், எதிரான மன நிலையை கொண்டவர்கள் என்பதற்கு, இதை விட சான்று தேவையில்லை. நிர்மலா சீதாராமனுக்கு, கமல்ஹாசன் பதிலடி தந்ததற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
நிர்மலா சீதாராமனுக்கு, கமல்ஹாசன் பதிலடி கொடுத்ததை தமிழினமே பாராட்டுகிறது. வாழ்த்துகிறது. ஆனால் வானதி சீனிவாசன் போன்றவர்கள், பாஜவினர் வயிற்று எரிச்சலில், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று பிதற்றிக் கொண்டு இருக்கின்றனர். எங்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும். அதேபோல் வாக்குச்சாவடி பணிக்குழு முகவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
