×

பேக்அப் ஆகும் அன்புமணி டீம்

தர்மபுரி மாவட்டத்தின் வித்தியாசமான தொகுதிகளில் ஒன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி. 1951ம் ஆண்டில் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் இங்கு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை சேர்ந்த எஸ்.கந்தசாமி கவுண்டர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1957ல் சுமலதாதேவி (காங்கிரஸ்), 1962ல் கரிவேங்கடம் (திமுக), 1967ல் முத்துசாமி (காங்கிரஸ்), 1971ல் என்.மாணிக்கம் (திமுக), 1977ல் அப்புனுகவுண்டர் (ஜனதாகட்சி), 1980ல் தீர்த்தராமன்(காந்திகாமராஜ் தேசிய காங்கிரஸ்), 1984ல் ஆறுமுகம்(அதிமுக), 1989ல் நஞ்சப்பன் (சுயேட்சை), 1991ல் புருஷோத்தமன் (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், 1996ம் ஆண்டில் முதல்முறையாக பாமக சார்பில் போட்டியிட்ட ஜி.கே.மணி வெற்றி பெற்றார். இதற்கடுத்து 2001ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பாமக சார்பில் போட்டியிட்டு ஜி.கே.மணி வெற்றி பெற்றார். ஆனால் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியண்ணன், அவரது மறைவுக்கு பிறகு 2010ம் ஆண்டு இடைத்ேதர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அவரது மகன் இன்பசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நஞ்சப்பன், 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இன்பசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 2021ம் ஆண்டு தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட ஜி.கே.மணி வெற்றி பெற்றார். 1996, 2001, 2021 தேர்தல்களில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்ட பாமக, இந்த தொகுதியை தங்களது கோட்டை என்றே கூறி வருகிறது.

ஆனால் இந்தக்கோட்டையில் வரப்போகும் சட்டமன்றத்தேர்தலில் பாமகவின் இரு அணிகளும் போட்டியிட ஆர்வம் காட்டாமல் தயங்கி நிற்கின்றனர் என்கின்றனர் உள்ளூர் பாமக மூத்தநிர்வாகிகள். இதுகுறித்து பென்னாகரம் தொகுதி பாமக முன்னோடிகள் கூறியதாவது: இரண்டு யூனியன்களை உள்ளடக்கிய பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் 23 ஊராட்சிகள் உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் வன்னிய சமூக மக்கள், அதிகளவில் உள்ள தொகுதிகளில் பென்னாகரம் முதலிடத்தில் உள்ளது.

ஆனாலும் கடந்த காலங்களில் தனித்து போட்டியிட்டு பாமக இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேர்தல்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தந்தை ராமதாஸ்-மகன் அன்புமணி மோதலால் கட்சி பிளவுபட்டு நிற்கிறது. மக்களின் மனதில் பதிந்த மாம்பழம் சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதிலும் குழப்பமே நீடிக்கிறது. தற்போது அதிமுக கூட்டணியில் அன்புமணி உள்ளார்.

ஆனாலும் இந்த தொகுதியை கேட்டு பெறுவதில் அன்புமணி ஆர்வம் காட்டவில்லை. ராமதாஸ் அணியும் இதுவரை கூட்டணியை உறுதிசெய்யவில்லை. இந்த முறை இங்கு போட்டியிடுவதை விட, அன்புமணி தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ‘ஸ்டப்’ கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். இது ஒருபுறமிருக்க அதிமுக சார்பில் போட்டியிட தர்மபுரி மாவட்ட முன்னாள் பால்கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாய்ப்பு கொடுக்க சம்மதித்துள்ளார். இதை அன்புமணி தரப்பும் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. கட்சி சிதறி நிற்கும் நிலையில் அதிமுகவும் தொகுதிக்கு குறிவைத்துள்ளது. இந்த நேரத்தில் பென்னாகரத்திற்கு மல்லுக்கட்டினால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதை அறிந்து பின்வாங்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* 16 வருடத்திற்கு பிறகு டிஷ்யூம்
பென்னாகரம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக இருப்பவர் பாமகவின் முன்னாள் தலைவரான ஜி.கே.மணி. 3முறை இங்கு போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு கூட்டணி பலமும் ஒரு முக்கிய காரணம். திமுக எம்எல்ஏவாக இருந்த பெரியண்ணன் மறைவை தொடர்ந்து 2010ம் ஆண்டு நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இன்பசேகரன் 36ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாமக சார்பில் போட்டியிட்ட ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் 2வது இடத்தை பிடித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்பழகனுக்கு 3ம் இடம் கிடைத்தது. இந்த தேர்தலில் தமிழ்க்குமரனை களமிறக்க ராமதாஸ் உறுதியாக உள்ளார். இந்தவகையில் வரப்போகும் தேர்தலில் அதிமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால், தமிழ்க்குமரனும், அன்பழகனும் 16 வருடத்திற்கு பிறகு மீண்டும் பென்னாகரத்தில் மோதும் சூழல் ஏற்படும்.

Tags : Anbumani Team ,Dharmapuri district ,Bennagaram Assembly ,S. Kandasamy Gounder ,Tamil Nadu Workers' Party ,Sumalatha Devi ,Congress ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால்...