×

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு; மகளிர் ஆணைய உத்தரவை எதிர்த்து சி.வி.சண்முகம் வழக்கு: ஐகோர்ட்டில் 12ல் தீர்ப்பு

சென்னை: விழுப்புரத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி சென்னையைச் சேர்ந்த பிரமிளா மற்றும் ராதிகா ஆகியோர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.க்கு நவம்பர் 11ம் தேதி பரிந்துரைத்திருந்தது.

இதை எதிர்த்து, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு ஆஜராகுமாறு மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. ஆணையத்தின் பிற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல், குற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆணைய தலைவர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனால் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில் புகார் விவரங்களை தெரிவிக்க அவசியமில்லை. ஆணையம் தற்போது பரிந்துரை மட்டுமே அனுப்பியுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்று இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

மகளிர் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆணைய தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் அமர்வு குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து. கையெழுத்திடும் அதிகாரி என்ற முறையில் ஆணைய தலைவர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : C.V. Shanmugam ,Women's Commission ,Chennai ,Pramila ,Radhika ,AIADMK ,minister ,Rajya Sabha ,Villupuram ,
× RELATED பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி...