பொங்கல் போனஸ் வழங்க கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு, பிப். 3: ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க கோரி ஈரோட்டில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காளைமாடு சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அச்சங்க மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிடோருக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். 21 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலுவை தொகை, அகவிலைப்படி நிலுவை தொகையினை ரொக்கமாக உடனடியாக வழங்க வேண்டும்.   மேலும் அனைத்து வகையான ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி, 9 மாதங்களாக வழங்காமல் நிலுவையில் உள்ள இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும். அனைத்து வகையான சிகிச்சைகளுக்குமான செலவுத்தொகையை முழுவதையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், இணை செயலாளர் ஹரி தாஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>