சிவகங்கை: தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக தவணை முறையில் தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி அறிவித்து வருகிறார். அதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூறினார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசுக்கு இருக்க கூடிய மக்களின் பேராதரவைக் கண்டு, எதிர்முகாமில் உள்ள அதிமுக, ஏதோ நாங்களும் இருக்கிறோம் என்பதற்காக முண்டியடித்துக்கொண்டு தவணை முறையில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. அவர்களது வாக்குறுதிகளை எல்லாம் மக்கள் நம்பமாட்டார்கள்.
கடந்த காலங்களில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சென்றவர்களின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயராக இல்லை. வண்டி, வண்டியாக வாக்குறுதிகளை கொடுத்தாலும் மக்கள், அவர்களை நம்ப தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி பதற்றத்தின் உச்சத்தில் உள்ளார். தமிழக ஆளுநர் இருக்க வேண்டிய இடம் ஆளுநர் மாளிகையா அல்லது சென்னையில் இருக்கும் வேறு இடமா என்பதை நீங்கள் (செய்தியாளர்கள்) தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
