×

உடலை வலுவாக்கும் உளுந்தம் பருப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

உளுந்தம் பருப்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தாவரம். இந்தியாவில் பழங்காலம் முதலே உளுந்தம் பருப்பு இந்திய உணவு வகைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது ஃபேபேசியே எனும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் – Vigna mungo என்பதாகும்.

பண்டைய பெயர் – மாஷம்

தமிழ்ப் பெயர்- உளுந்து அல்லது உளுந்தம் பருப்பு. உளுந்தம் பருப்பு இரண்டு வகைகளாக பயன்படுத்தப்படுகிறது. ஒன்று தோல் நீக்கப்பட்ட வெள்ளை உளுந்து (White Urad Dal) மற்றொன்று தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்து (Black Urad Dal), வெள்ளை உளுந்தை காட்டிலும் கருப்பு உளுந்து அதிக நார்ச்சத்து கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருப்பு உளுந்து புரதம், இரும்புச்சத்து, ஃபோலேட், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய சத்துகளை கொண்டுள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலுக்கு ஆற்றல் அளித்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது.

ஊட்டச்சத்து மதிப்பு 100 கிராமில்

ஆற்றல் 340 K cal
புரதம் 24 கிராம்
கார்போஹைட்ரேட் 59 கிராம்
நார்ச்சத்து 18 கிராம்
இரும்புச்சத்து – 7-8 மில்லி கிராம்
பொட்டாசியம், மெக்னீசியம்,
பாஸ்பரஸ் – அதிக அளவில் உள்ளது.

சிறப்புகள்

உடல் சூடு தணிய – இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான் மற்றும் மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்ற வற்றால் உடல் சூடு ஏற்படுகிறது. உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடல் வலுப்பெற – கடும் நோயில் இருந்து மீண்டவர்களும், உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வரபிரசாதம். இவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும்.

ரத்த அழுத்தம் – ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், எனவே உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்து வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

நீரிழிவு நோயாளிகள் பொதுவாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் இது செரிமானப் பாதையால் உறிஞ்சப்படும் ஊட்டச்சத்துக்களின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக, இது குளுக்கோஸ் மற்றும் ரத்த சர்க்கரையை பராமரிக்க உதவுகிறது, இதனால் நீரிழிவு நோயைக் கையாள்வது மிகவும் எளிதாகிறது. இது ரத்த சர்க்கரை மிகக் குறையாமல் அல்லது மிக விரைவாக உயராமல் உளுந்து தடுக்கிறது.

கருப்பு உளுந்தின் முக்கிய நன்மைகள்

செரிமான ஆரோக்கியம் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது மலத்தை மென்மையாக்கி குடல் இயக்கத்தை எளிதாக்க, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டையும் தடுக்க உதவுகிறது.ஆற்றல் மற்றும் பலம் – கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்துள்ளதால் உடல் ஆற்றலை அதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியம் – இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை பலப்படுத்துகின்றன. சரும ஆரோக்கியம்- இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.

பெண்களுக்கான நன்மைகள் – கருப்பை சுவர்களை வலுப்படுத்தவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், கருவுறுதல் திறனை மேம்படுத்தவும் உதவும்.ரத்த சோகையை தடுக்கின்றன – இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை தடுக்கிறது. கருப்பு உளுந்து, நம் பாரம்பரிய உணவுகளில் ஒரு அத்தியாவசிய பகுதியாகும். இது உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் முழுமையான ஆரோக்கியத்தை வழங்கும் சிறந்த சைவ உணவாக விளங்குகிறது. தினசரி உணவில் சரியான அளவில் உளுந்து சேர்த்துக்கொள்வது, நீண்ட கால ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக அமையும்.

உளுந்து பயன்படும் உணவுகள்

இட்லி, தோசை, மெதுவடை, உளுந்து கஞ்சி, உளுந்து லட்டு, உளுந்து சாதம், உளுந்து சூப்.

தொகுப்பு: உணவியல் நிபுணர் சங்கீதா

Tags : Elundam ,South Asia ,India ,
× RELATED தனிமையிலே இனிமை காண முடியுமா?