×

தனிமையிலே இனிமை காண முடியுமா?

நன்றி குங்குமம் டாக்டர்

Dependant Personality Disorder ஒரு பார்வை!

சென்ற இதழில் தவிர்ப்பு மனநிலையர் சார்பு நிலையரோடு எப்படி தொடர்புடையவராக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி இருந்தோம் இல்லையா? விரிவாகப் பார்ப்போம். அமெரிக்க மனநலச் சங்கம் வகுத்துள்ள DSM 4 – ஆளுமைக் கோளாறுகளின் பட்டியலில் மூன்றாவது தொகுப்பில் (Cluster C) இடம்பெறும் தவிர்ப்பு நிலையர் மற்றும் (Avoidant), சார்பு நிலையர் (Dependant), பெருவிருப்பக் கட்டாயச் சுழற்சி குறைபாடு (Obsessive – Compulsion Disorder) ஆகிய மூன்றுமே பெருங்கவலை (Anxiety) மற்றும் அதீத அச்சத்தின் பீடிப்பு (Fearfulness) காரணமாக தோன்றுபவையாகும். இவற்றில் OCD குறித்து ஏற்கனவே நாம் விரிவாக நிறையப் பேசிவிட்டோம்.

மீதமுள்ள தவிர்ப்பு நிலையரும் , சார்பு நிலையரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல மிக நெருங்கிய தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். தங்களின் பயத்தையும், கவலையையும் சமாளிக்க எடுக்கும் முயற்சிகள்தான் மாறுபடுகின்றன. இந்த இரண்டு ஆளுமைக்கோளாறு உள்ளவர்களுக்கும் மனிதர்கள் மீதான அச்சம்/அவநம்பிக்கை, தன்னைக் குறித்த தாழ்வு மனப்பான்மை, உணர்வுகளின் போதாமை, தான் கைவிடப்பட்டு விடுவோமா என்ற புறக்கணிப்பின் கவலை போன்ற சிக்கல்கள் இருக்கும்.

அதனால் தவிர்ப்பு நிலையர் தம் மனக்கதவை மூட ஆரம்பித்து விடுகிறார். சார்பு நிலையர் நெருக்கமானவரைப் பற்றிக்கொண்டு இயங்க ஆரம்பிக்கிறார். எனவே, உளவியல் பார்வையில் சார்பு நிலையருக்கு சிகிச்சை அளிப்பதே எளிது. மேலும், எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாமல் ‘குறை சொல்கிறார்கள்’ என்ற எதிர் மனநிலையில் தவிர்ப்பு நிலையர் இருக்கிறார்கள். சார்பு நிலையரோ தனிமையாக இருப்பதற்கே பயம் கொள்கிறார்கள்.

எனவே, சார்பு நிலையரை உணர்வுபூர்வமாக அரவணைத்துக் கையாளும் முறை நல்ல பயன் தரும். தவிர்ப்பு நிலையருக்கு அவர்களைப் போலவே நாமும் சற்று விலகியிருந்து தர்க்கரீதியாக ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லியும், செயல்களில் காட்டியும் புரிய வைக்க வேண்டும். ஆரம்ப நிலைகளிலேயே கண்டறிந்து இந்த இரண்டு தன்மைகளைகளுக்கேற்ப பொருத்தமான சிகிச்சையை வழங்க வேண்டும்.

மரபியல் காரணிகள், வாழ்க்கைச் சூழல்கள், சிறு வயது பாதிப்பு போன்ற வழக்கமான காரணிகள்தான் இங்கும் முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், தொகுப்பு A மற்றும் B பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர ஆளுமைக் கோளாறுகளைப் போல பரவலாக விவாதிக்கப்படாமல், அலட்சியமாக விடப்பட்டுள்ள மனநலக் கோளாறுகள் இவை. ஆனால், இரண்டுமே இளைய தலைமுறையினரிடம் மிக வேகமாக பரவி வருகின்றன.

இவர்கள் அதீத உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக (Hyper – Sensitive) இருப்பதால் பெரும்பான்மையான உளவியலாளர்கள் பொறுமையிழந்து “இவர்களெல்லாம் கேட்கவே மாட்டார்கள்’, “இது வயசுக் கோளாறு…” , “இந்த வயதில் அப்படித்தான் எல்லோரும் இருப்பார்கள். போகப் போக சரியாகிவிடும் ‘” என்று தாங்களும் தவிர்ப்பு நிலையராக மாறி பாதி சிகிச்சை அளித்துவிட்டு ஓடிவிடுவார்கள். இது தற்காலத்தில் அதிகம் நிகழும் தவறான உளவியல் அணுகுமுறை என்பதால் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல சரியாக கவனிக்கப்படாத மனநலச் சிக்கல்கள் பெரும் ஆளுமை நோய்களாக உருவெடுக்க வாய்ப்புண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நெருங்கிய உறவைப் பிரியவே முடியாத நிலை, தனிமையில் இருப்பதை அசௌகர்யமாக (Discomfort) உணர்தல், உறுதியாக எந்த முடிவும் எடுக்க முடியாமை (Indecisiveness), எந்தச் செயலைச் செய்யவும் பிறரைச் சார்ந்து இருப்பது போன்ற அறிகுறிகள் ஒருவர் சார்புநிலைத் தன்மைகளைக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும்.

“மனிதர்களின்றி மனிதர்களில்லை” என்போம். உண்மைதான். குடும்பத்தோடு ஒட்டியிருப்பது நன்மைதான் என்றாலும் எதற்கும் ஓர் அளவு உண்டு இல்லையா ? இல்லையெனில், ஆறு வயதுக் குழந்தை மனநிலையிலே தேங்கிவிட்ட ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவியைப் போலாகிவிடுவோம். வெளிப்பார்வைக்கு வளர்ந்தவர்கள் போல் காட்டிக் கொண்டாலும், உடலளவில் மட்டுமே தவிர்ப்பு நிலையர் வளர்ந்து மனதளவில் குழந்தையாகவே இருப்பார்கள்.

எந்தச் சண்டை சச்சரவும் செய்யாமல் அமைதியாக ஆனால் நெடுங்காலம் சார்ந்தே இருக்கும் தாழ்நிலை ஆளுமையரை எப்படிக் கோபித்துக் கொள்வது? இந்த நிலை அவருக்கும் உடனிருப்பவர்களுக்கும் எவ்வளவு ஆபத்தானது? தன் உடை, உணவு போன்ற சிறு சிறு முடிவுகளுக்கும் , கல்வி வேலை திருமணம் போன்ற பெரிய முடிவுகளுக்கும் பிறரையே சார்ந்திருப்பதால் தனித்துவ அடையாளத்தையும் இழக்கிறார்கள். தம் திறன்களையும், ஆற்றலையும் பயன்படுத்தாமல் கடைசிவரை தன்னைப் பிறர் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு ஒரு நடைமுறை உதாரணத்தைப் பார்ப்போம்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி . 15 வயது முதல் கல்வியில் தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருந்துள்ளார். அவர் தந்தையோ மனம் தளராது மகளுக்குப் பிடித்த வெவ்வேறு துறைகளில் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தி, தொடர்ந்து உற்சாகமூட்டி வந்துள்ளார். மகள் எப்படியாவது எதாவது ஒன்றைப் பற்றி வாழ்வில் முன்னேறிவிட வேண்டும் என்று உழைத்துக் கொட்டினார். இதனால் தந்தையைச் சார்ந்தே இவர் வாழ்ந்து பழகி விட்டார்.

இந்தத் தந்தைப் பாசம் இயல்புதான் என்று எவரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், திருமணமாகியும், குழந்தை பெற்றும் மாறாத இந்த சார்பு மனநிலை ஒரு கட்டத்தில் தன் வாழ்வில் நேரும் தோல்விகளுக்கு எல்லாம் தந்தை முன்புபோல் போதிய உதவிகள் செய்யாததுதான் என்று நம்பத் தொடங்கி விட்டார். தன் தீவிர சார்புத்தன்மையால் சுய முன்னேற்றத்தைத் தொலைத்து விட்டோம் என்று உண்மையை கடைசி வரை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

சமீபத்தில், 83 வயதில் அவரது தந்தை இறந்தபோது ‘ என் தந்தையின் முடி ஏன் நரைத்திருக்கிறது ?’, ‘ அவரின் நிறம் சிவப்பாக இல்லையே (மகள் 15 வயதில் கண்ட தந்தையின் நிறம்) ‘ அடுத்த ஆண்டு நான் வேலைக்குச் சேர்ந்து விடுவேன் . உங்களைப் பார்த்துக் கொள்வேன் ‘ என்று 55 வயதில் அவர் பிதற்றத் தொடங்கிய போதுதான் சுற்றியுள்ளோருக்கு இது ஏதோ மனநலக் கோளாறு என்று புரியத் தொடங்கியது.

அவர் நிகழ்காலத்தில் நடப்பவை குறித்த விழிப்புணர்வே இல்லாமல் பதின்பருவச் சிறுமியாகவே இத்தனை காலம் சார்பு நிலை ஆளுமைக் கோளாறுடன் வாழ்ந்திருக்கிறார் என்பது எவ்வளவு அதிர்ச்சி. அந்தப் பெண்மணியின் கவனிக்கப்படாத மனக்கோளாறினால் அந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதங்கள், சொத்துச் சண்டைகள், பிரிவுகளின் வலிகள் சொல்லி மாளாது.

என்ன செய்வது ? நம்மவர்கள் ” வந்தபின் கதறும் ” கொள்கை கொண்டுதானே இருக்கிறார்கள். ‘வருமுன் காக்கும்’ அற்புத மந்திரத்தை யார் கூறினாலும் அலட்சிமாகக் கடந்து விடுகிறார்களே. பண்டைய காலம் தொடங்கி 1950-கள் வரையில் மனநலக் கோளாறுகளின் பட்டியலில் ‘ Passive- Agressive Personality’ என்ற பெயரில் தவிர்ப்புக் கோளாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. செயலற்று அடக்கப்பட்ட தீவிரக்கோபம் அல்லது அமைதியாகிவிட்ட சுயதாக்குதல் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

DSM – 2 (1968) பட்டியலிடுதலின் போதுதான் சார்பு நிலை ஆளுமைக் கோளாறு (Dependant Personality Disorder) என்ற தனிப்பெரும் பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. DSM 3 (1980) – இல் அதிக அக்கறையும், கவனமும் செலுத்தப்பட வேண்டுமென உணர்த்தப்பட்டது. சார்பு நிலையரின் நடத்தைகள் அவரின் தன்னம்பிக்கையைக் குறைத்து விடுகிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.”நான் அடிமை இல்லை” என்று கம்பீரமாகச் நடை போடாமல் நான் அடிமைதான் என்று தாழ்பணிந்தே (Submissive) ஒதுங்கிக்கிடக்கும் நவீன கட்டப்பாக்கள்தான் சார்பு நிலையர்கள்.

மேலும், பிறர் போதிய அன்பு காட்டவில்லை, தான் எதிர்பார்க்கும் அளவிற்கு உதவி செய்யவில்லை என்று கருதும் சார்பு நிலையரை NPD, Anti-Social, Psychopath போன்ற ஆபத்தான ஆளுமை கோளாறு கொண்டவர்கள் எளிதில் மனத்திரிபு செய்து வசப்படுத்திவிடக்கூடும். ஆக, தனக்கு எந்த விதத்திலும் உதவாத Toxic உறவுகளில் மாட்டிக்கொண்டு எளிதில் காயப்படுபவர்களில் பலர் இந்தப் பிரிவினரே என்று தெளிவாகப் புரிகிறது இல்லையா ?

வேறு சிலரோ தன் சோம்பேறித்தனத்தை / பொறுப்பின்மையை மறைக்க சார்புத்தன்மையை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். நீயே செய், நீ செய்தால்தான் நன்றாக இருக்கும், எனக்குத் தெரியல..என்று எல்லாவற்றையும் தவிர்த்து, தாங்கள் சார்ந்து இருப்பதாகவும் காட்டிக் கொள்வார்கள். இந்த இடத்தில் தவிர்ப்பு மனநிலையும், சார்பு மனநிலையும் ஒரு புள்ளியில் இணைவதை அறியலாம். எனவே, எது ஆளுமைக் கோளாறு எது தப்பித்தல் தந்திரம் (Escaping Strategy) என்று கவனமாகப் பிரித்தறிய வேண்டும்.

அதே நேரம் சார்பு நிலையர்களிடம் நல்ல பக்கங்களும் உண்டு. ‘இவரின்றி நானில்லை’ – என இவர்கள் சார்ந்திருக்கும் நபர் உண்மையிலேயே இவருடைய நலன் விரும்பியாக இருந்துவிட்டால் சார்புத்தன்மையை நீக்க உதவுவார். சார்பு நிலையர் அன்பிற்குக் கட்டுப்படுபவர்கள் என்பதும் உளவியல் சிகிச்சை அளிக்க சாதகமாகிறது. எனவே, யாராக இருந்தாலும் அதீதமாக இன்னொருவரைச் சார்ந்திருப்பதை ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது. ஒருவருக்கு நீண்ட காலம் உதவிக்கொண்டே இருப்பதில் ஒளிந்திருக்கும் எதிர் விளைவுகளையும் உணர வேண்டும். நமக்கு ஓர் அடிமை சிக்கினால் போதும் என்ற குரூர மகிழ்ச்சி தற்காலிகமானது. ‘பூமரங்’ போல் நாளை நமக்கு அதை யாரேனும் செய்வார்கள்.

எனவே, ”பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுக்காதே தூண்டிலைக் கொடு” என்ற சீனப் பழமொழியை நினைவில் கொள்வோம். உண்மையான அன்பு எனில் அது வலிமையாக்கும் என்ற விழிப்புணர்வே ஆரோக்யமான மனநலத்திற்கான தாரக மந்திரம்.தட்டினால் கைக்கருகே கிடைக்கும் பலன்மிக்க உளவியல் சிகிச்சைகளை உரியவருக்கு உரிய நேரத்தில் வழங்க உதவுவோம்.

தொகுப்பு: மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

Tags : Saffron ,DSM ,American Psychiatric Association ,
× RELATED உடலை வலுவாக்கும் உளுந்தம் பருப்பு!