×

நடத்தை சந்தேகத்தால் தகராறு: கணவனை கழுத்தை நெரித்து கொன்ற இளம்பெண் கைது

 

ஓசூர்: ஓசூரில் கணவனை சரமாரியாக தாக்கி, கழுத்தை நெரித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்பேட்டை நிலமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரது மனைவி அம்சவள்ளி (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பார்த்திபன் ஓசூர் உழவர் சந்தையில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார். அம்சவள்ளி சென்ட்ரிங் போடும் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், மனைவியின் நடத்தை மீது பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், தினசரி வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக பார்த்திபன் மது குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அம்சவள்ளியிடம் தகராறு செய்து, அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும், பார்த்திபன் மது போதையில் வீட்டிற்கு சென்று, அம்சவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்சவள்ளி, பார்த்திபனை சரமாரியாக அடித்து உதைத்து, காலால் கழுத்தை மிதித்துள்ளார். மேலும், தான் அணிந்திருந்த புடவையால் கணவனின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், பார்த்திபன் உயிரிழந்தார். பின்னர் அம்சவள்ளி, தனது கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, பார்த்திபனின் அண்ணன் விநாயகமூர்த்திக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அங்கு விரைந்த விநாயகமூர்த்தி, தம்பியின் உடலை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பார்த்திபன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், அம்சவள்ளியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags : Hosur ,Salem ,Parthipan ,Nilamaryamman Temple Street, Osur Terpet, Krishnagiri District ,Amsavalli ,
× RELATED சென்னை முகப்பேர் பகுதியில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது