சென்னை: அரசு ஒதுக்கீட்டில் கடை மற்றும் ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.20 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் திலகா(46). இவரது வீட்டின் அருகே வசித்து வரும் துளசிராமன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக குடும்ப நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அந்த பழக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு துளசிராமன்(44) அவரது மனைவி ஆகியோர் முன்னணி கட்சி ஒன்றில் மாவட்ட தலைவராக இருப்பதாகவும், தனக்கு அரசு அதிகாரிகள் தெரியும். அரசு ஒதுக்கீட்டில் கடை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, திலகா மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் இணைந்து கடந்த 2024ம் ஆண்டு ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் ரூ.17.5 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் பணம் பெற்று பல மாதங்கள் ஆகியும் அரசு ஒதுக்கீட்டில் எந்த கடையும் வாங்கி தரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த திலகா மற்றும் அவரது உறவினர்கள் துளசிராமனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திலகா ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் துளசிராமனை பிடித்து விசாரணை நடத்திய போது, திலகாவிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.17.5 லட்சம் பணம் பெற்றது தெரியவந்தது. மேலும், சென்னையில் தங்கி மெக்கானிக்காக பணியாற்றி வரும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பெர்னாட்ஷா(33) என்பவரிடம், துளசிராமன், தான் முன்னணி கட்சியின் மாவட்ட தலைவர் என்று கூறி, சென்னை மாநகராட்சியில் ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து துளசிராமன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, துளசிராமனை நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
