×

தினசரி பழக்கவழக்கங்கள் தரும் இயன்முறை மருத்துவ நோய்கள்!

நன்றி குங்குமம் தோழி

சென்ற மாதம் இளம் வங்கி ஊழியர் ஒருவர் முதுகு வலி காரணமாக வந்திருந்தார். பரிசோதனை செய்து பார்த்ததில் தசைகளின் பாதிப்பினால் முதுகு வலி ஏற்பட்டுள்ளது தெரிந்தது. அவரின் வாழ்க்கை முறையினால் தசைகளில் இவ்வகை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதனை அவருக்கு புரிய வைத்து, அதற்கான தீர்வுகளையும் வழங்கினேன்.அவர் மட்டுமல்ல… நம்மில் பலரும் அலுவலக வேலை, வீட்டு வேலை என மாறி மாறி உழைத்து நம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மறக்கிறோம்; மறுக்கிறோம். இதனால்தான் பல வகையான உடலியல் சிக்கல்கள் வருகிறது.

அதில் முக்கியமானவை நம் பழக்க வழக்கங்களிலிருந்து வரும் தசை சார்ந்த பிரச்னைகள்.

அப்படியென்றால் என்ன? எவை எல்லாம் தசை சார்ந்த பிரச்னைகள்? அது ஏன் வருகிறது? அதற்கு என்ன தீர்வு? இவற்றில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு யாது? போன்றவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

இயன்முறை மருத்துவ நோய்கள்…

தசை பிடிப்பு, தசை வலி, தசை சுளுக்கு, தசை அயர்ச்சி, முதுகு வலி, கழுத்து வலி, கால் மூட்டு வலி, ஜவ்வு அறுந்து போவது, எளிதில் உடல் அசதி, உடல் பருமன் அதிகமாக இருப்பது.

தினசரி பழக்க வழக்கங்கள்…

* அலுவலக இடத்தில் சாப்பிடும் போதும், வேலை செய்யும் போதும் நாற்காலியில் அமர்வது, பின் வீட்டிற்கு வந்தும் காய்கறிகள் நறுக்க நின்று கொண்டே நறுக்குவது, உணவினை உணவு மேசையில் உண்பது, மற்ற நேரங்களில் சோபா அல்லது நாற்காலியில் அமர்வது, தூங்கும்போது கட்டிலில் படுத்துத் தூங்குவது, வெளிநாட்டு கழிப்பிடம் உபயோகப்படுத்துவது என நாம் கீழே அமரும் வாய்ப்பு நினைத்தாலும் நமக்கு கிடைப்பதில்லை.

* மேலும், வேலை இடத்தில் வேலை வேலை என சிலர் மூழ்கி இருக்கும் நேரம் என்பதால், நிறைய பேர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கூட எழுந்து நடப்பதோ, சில எளிய உடற்பயிற்சிகள் நின்று கொண்டே செய்வது போன்ற விஷயங்களை தவிர்க்கிறார்கள்.8 ஐந்து நாள் உழைத்ததன் விளைவாக வார இறுதியிலும் உறங்குவது, உண்பது, ஓய்வெடுப்பது போன்றே கழிக்கிறார்கள்.

*சூரிய ஒளியில் நிற்பதை தவிர்க்கிறோம்.

*இரவு நேரங்களில் அதிகமாக கைபேசியை பயன்படுத்துகிறோம்.

*நீர் அருந்துவதும் குறைவாகவே இருக்கிறது.

அறிகுறிகள்…

சிறு வேலைகளுக்கு கூட தசை வலி ஏற்படுவது, தினமும் எளிதாய் உடல் அயற்சி அடைவது, இளம் வயதிலேயே கால் வலி, முதுகு வலி, கழுத்து வலி வருவது.

இயன்முறை மருத்துவம்…

*மூட்டு வலிகள் இல்லையென்றாலும் எந்தத் தொழில் செய்தாலும் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி, அந்தத் தொழில் நம் தசைகளை எவ்வகையில் பாதிக்கும் என்பதனை தெரிந்து கொள்வது அவசியம்.

*அவர் உடற்பயிற்சிகளின் வகைகளில் நமக்கு தேவையானவற்றை கற்றுக் கொடுப்பர்.

*மேலும், என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், எவ்வளவு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும், எளிய முறைகள் என்னென்ன என்பது போன்ற அனைத்தையும் நமக்கு கற்றுக் கொடுப்பர்.8நம் தசை திறனை பரிசோதித்த பின் உடற்பயிற்சிகளை நமக்கு பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர் என்பதால், உடற்பயிற்சிகள் செய்வது பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை.

*மேலும், ஒரு வருடத்திற்கு ஒரு தடவை நம் உடற் பயிற்சிகளை நமது உடல் திறனுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொடுப்பர்.

*அதோடு, இயன்முறை மருத்துவ உடற் பயிற்சிகள் செய்வதன் மூலம் அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியும்.

*இயன்முறை மருத்துவ உடற் பயிற்சிகள் செய்வதால் மேலே சொன்ன முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி போன்ற உடல் மூட்டு வலிகளில் இருந்து பூரணமாக விடுபடலாம், வராமல் தடுக்கலாம். எதிர்கால ஆரோக்கியத்தின் முழு அஸ்திவாரமும் உடற்பயிற்சிதான் என்பதனை உணர்ந்து உடற்பயிற்சிகள் கற்றுக் கொள்வது அவசியம்.

விளைவுகள்…

*மூட்டு ஜவ்வு (Ligament) கிழிவது.

*தசை சமச்சீரின்மையால் மூட்டு வலி ஏற்படுவது.

*எலும்பு பலவீனமாய் ஆவது.

*நரம்பு அழுந்தப்படுவது. இதனால் கை, கால்களில் குடைச்சல் ஏற்படும்.

*மூச்சுத்திறன் குறைவாக இருப்பதால் சிறிது நேரம் நடந்தாலே மூச்சு வாங்குவது.

*அதிக உடற்பருமன்.

*ஹார்மோன்கள் சமச்சீரின்மையால் தைராய்டு, பி.சி.ஓ.டி, முறையற்ற மாதவிடாய் போன்ற பல பிரச்னைகள் வருவது.

இதில் முக்கியமான சிக்கல் பெண்களுக்குதான் ஏற்படுகிறது. முக்கால்வாசி பெண்கள் குழந்தை பிறந்த பின் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை.

வராமல் தடுக்கும் வழிகள்…

*தினமும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

*நம் வாழ்க்கை முறையை எளிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஆன்லைன் வழியாக பொருட்களை வாங்காமல், அருகில் இருக்கும் கடைக்கு நடந்து சென்று வாங்கி வரலாம்.

*அதேநேரம் தொழில், வேலை எல்லாம் வாழ்க்கையின் ஒரு பங்கு மட்டுமே. அதையும் தாண்டி நம் ஆரோக்கியம்தான் வாழ்க்கையின் முழு அஸ்திவாரம் என்பதனை உணர்ந்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், வாழ்க்கை முறையில் கவனம் செலுத்துவதும் மிகவும் அவசியம்.

*தொழிலுக்கு ஏற்ப உணவு முறைகள் இருக்கிறது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்பதனை பொறுத்து அவர் எவ்வளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் ஒவ்வொரு பகுதியிலும் அதாவது, மாவுச் சத்து, புரதச் சத்து, நார்ச்சத்து எவ்வளவு உட்கொள்ள வேண்டும் போன்ற விவரங்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

*சூரிய ஒளியில் தினமும் நிற்பது, போதுமான நீர் அருந்துவது, இரவு சீக்கிரம் தூங்கச் செல்வது என சிறு மாற்றங்களை நாம் செய்வது அவசியம்.தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். இது உழவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும்தான். தை பிறந்ததன் காரணமாக நாமும் நம் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு தசை பிரச்னைகளிலிருந்து தப்பித்துக் கொள்வோம். இதற்கு இயன்முறை மருத்துவம் 100% உதவியாய் இருக்கும் என்பது திண்ணம்.

Tags : Kumkumam ,
× RELATED கவுன்சலிங் ரூம்