* தாயான பின்பும் சாதனை பென்சிக், எலினா அசத்தல்
லண்டன்: மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவுக்கான டபிள்யுடிஏ தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. அதில், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் (28) 3342 புள்ளிகளுடன் ஒரு நிலை உயர்ந்து 9ம் இடத்தை பிடித்தார். அதேபோல் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (31) 3205 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 10ம் இடத்துக்கு தாவினார். பென்சிக்கிற்கு கடந்த 2023 செப்டம்பரில் பெல்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதேபோல், எலினாவிற்கும் ஏற்கனவே ஸ்கேய் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் டபிள்யுடிஏ தரவரிசை பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்து, டென்னிஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
* இந்தியாவை வெல்வது கடினம்: கிளிங்கர்
வதோதரா: டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை வெல்வது மிகவும் கடினம் என, ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் மைக்கேல் கிளிங்கர் கூறியுள்ளார். மகளிர் பிரீமியர் லீக்கில் ஆடிவரும் குஜராத் ஜெயன்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கிளிங்கர் இதுகுறித்து நேற்று கூறுகையில், ‘நியூசிலாந்துடனான டி20 தொடரில் இந்திய அணி அட்டகாசமாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் சிறப்பான ஃபார்மை பார்க்கும்போது, டி20 உலகக் கோப்பை போட்டிகளில் எளிதில் வெல்ல முடியாத ஒன்றாக இந்தியா திகழ்கிறது’ என்றார்.
* ஆசிய துப்பாக்கி சுடுதல் இந்தியாவில் நடக்கும்
புதுடெல்லி: வரும் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், ஆசிய ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளை அடுத்தாண்டு இந்தியா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான அனுமதிக் கடிதத்தை, ஆசிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு, இந்திய தேசிய ரைபிள் சங்கத் தலைவர் கலிகேஷ் சிங் தேவிடம் அளித்துள்ளது.
