×

கோயில் விழாவிற்கு சென்று திரும்பியபோது பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவன், நண்பர் பலி: பரமத்திவேலூர் அருகே சோகம்

 

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே பள்ளி சுற்றுச்சுவரில் பைக் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன், நண்பர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மறவாபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் முருகன்(50). இவர் பரமத்தி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிரவீன்(19). இவர் பரமத்திவேலூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பரமத்திவேலூர் அருகே வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் கார்த்தி(19).

இவர் தனியார் கம்பெனியில் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நண்பர்களான பிரவீன், கார்த்தி ஆகிய இருவரும் நேற்று இரவு கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தேர் திருவிழாவிற்கு பைக்கில் சென்றுள்ளனர். அங்கு நள்ளிரவு வரை தேர்த்திருவிழாவில் இருந்துவிட்டு இருவரும் இன்று அதிகாலை 2 மணி அளவில் கபிலர்மலையிலிருந்து வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டனர். வண்டியை கார்த்தி ஓட்டி வந்ததாக தெரிகிறது. கபிலர்மலை- பரமத்தி செல்லும் சாலையில் பரமத்தி காவல் நிலையம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், பள்ளியின் சுற்றுச் சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் பைக்கில் இருந்த இருவரும் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி அவ்வழியாக சென்றவர்கள் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Paramathivellur ,Murugan ,Maravapalayam Arundhathiyar Colony ,Namakkal district ,Paramathi Panchayat… ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில்...