பெங்களூரு: கர்நாடகாவில் 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது. முதல்வர் அதிகார பகிர்வு தொடர்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே.சிவக்குமாரும் முதல்வர் பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது. ஆனால், இதுபற்றி கட்சியின் தலைமையிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. எனினும், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு நவம்பரில் இந்த ஆட்சியின் முதல் இரண்டரை வருட காலம் நிறைவடைந்தது. இதனால், முதல்வர் மாற்றம் செய்யப்படுவார் என யூகங்கள் எழுந்தது. எனினும், கர்நாடகாவில் தற்போது, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். இந்த சூழலில், இந்த நீண்டகால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டி.கே.சிவக்குமார் கூறுகையில், ‘நாங்கள் இருவரும் ஒன்றாக கைகோர்த்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் உள்ள சித்தராமையா உள்ளிட்ட சக எம்.எல்.ஏ.க்களால் எனக்கு பலம் வருகிறது. சித்தராமையாவின் நெருக்கடியான காலகட்டம் ஒவ்வொன்றிலும் துணை நின்றவன் நான். தொடர்ந்து அவருக்கு நான் உறுதுணையாக நிற்பேன். இதேபோன்று, எனக்கு நெருக்கடியான காலகட்டத்தில் சித்தராமையா துணை நின்றார்’ என்றார்.
