நன்றி குங்குமம் தோழி
அன்றாட வாழ்வில் நாம் சில விஷயங்களை கடந்து வந்திருப்போம். உதாரணத்திற்கு நன்றாக செயல்பட்டு வந்த கடை ஒன்று திடீரென்று மூடப்பட்டிருக்கும். அந்த இடத்தில் வேறு கடைகள் இருக்கும். அந்தக் கடையும் சில நாட்களில் வேறு கடையாக உருமாறி இருக்கும். சில வருடங்களில் அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
கடைகள், குடியிருப்புகள் எல்லாம் கால வேகத்தில் மாறி இருந்தாலும், ஐம்பது வருடங்களாக சற்றும் மாறாமல், புதுப்பிக்கப்படாமல், விரிவாக்கம் செய்யப்படாமல் இன்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் இயங்கி வருகிறது ‘சங்கர் ஸ்டோர்.’ இதனை அந்தப் பகுதியில் உள்ள பலரும் அக்கா கடை என்று செல்லமாக அழைக்கிறார்கள். சென்னை கோடம்பாக்கத்தில் தன் கணவருடன் இந்தக் கடையினை நிர்வகித்து வருகிறார் எழுபத்திரண்டு வயதான அஞ்சாதேவி.
‘‘எனக்கும் என் கணவர் காளிராஜன் இருவருக்குமே சொந்த ஊர் சிவகாசிதான். என் பெற்றோர் அலுமினியப் பாத்திரம் விற்கும் தொழில் செய்து வந்தாங்க. என் கணவரின் பெற்றோர் பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்தாங்க. நான் தீப்பட்டிகளை செய்து தரும் வேலையினை செய்து வந்தேன். என் கணவரும் இது போன்ற கூலி வேலையில்தான் ஈடுபட்டு வந்தார். வீட்டின் சூழல் காரணமாக நாங்க இருவருமே பள்ளிக்கு சென்று படிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு எங்களுக்கு மகன் பிறந்தான். அவருக்கு சங்கர் என்று பெயர் வைத்தோம். அதன் பிறகுதான் எங்க வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது’’ என்றவர், தன் மகனின் பெயரில்தான் இந்த பலசரக்கு கடையினை துவங்கியுள்ளனர்.
‘‘கடை திறந்த போது பெரிய அளவில் வருமானம் எல்லாம் கிடைக்கவில்லை. அதனால் குழந்தைகளை கவர்வதற்காக சிறுவர், சிறுமிகள், பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்ய துவங்கினோம். அதன் பிறகுதான் எங்களால் வருமானம் பார்க்க முடிந்தது. இங்கு அவர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைப்பதால், வீட்டில் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் ‘அக்கா கடை’க்கு போய் வாங்கிக் கொள்ள சொல்லி அனுப்பி வைப்பார்கள். அப்படித்தான் ‘அக்கா கடை’ என்று எங்களின் கடைக்கு பெயர் வந்தது. அதுவே இன்று வரை நீடித்து வருகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் என்னுடைய 72 வயதிலும் என்னை அக்கா என்றுதான் அழைக்கிறார்கள்’’ என்றவர், தன் மகனும் இந்தக் கடைக்காக கடுமையாக உழைத்துள்ளதாக தெரிவித்தார். ‘‘சின்ன வயசில் இருந்தே அவர் இந்தக் கடையில்தான் வளர்ந்தார். அதனால் அவருக்கு நாங்க படும் கஷ்டம் புரியும். என் மகனும் கடையில் அனைத்து வேலையும் பார்ப்பார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வெகுதூரம் கால் வலிக்க சைக்கிளில் சென்று கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார். என் கணவர் என்ன வேண்டும் என்று லிஸ்ட் போட்டு தருவார். சங்கர்தான் அனைத்தும் வாங்கி வருவார். வரும் லாபம் எங்களின் செலவுக்கே சரியாக இருந்ததால், எங்களால் வேலைக்கான ஆட்களை நியமிக்க முடியவில்லை. நாங்க மூவர் மட்டுமே கடையினை பார்த்துக் கொள்வோம்.
சங்கருக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும். பள்ளி சென்று மதிய உணவு நேரத்தில் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு நூலகம் சென்று தமிழ் இலக்கிய நூல்களை வாங்கிப் படிப்பார். பட்டிமன்றங்கள், அறிவு சார்ந்த சொற்பொழிவுகளை கேட்டு கேட்டு தமிழ் பேச்சாற்றலை பெற்றார். அந்தத் திறன் அவர் கல்லூரியில் சேரும் போது கை கொடுத்தது. படிப்பு முடிந்ததும் ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். படிப்புதான் அவரின் வாழ்க்கையை உயர்த்தியது’’ என்றவரின் மருமகளும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
‘‘எங்களின் மருமகளை நாங்க எங்களின் மகள் என்றுதான் சொல்ல வேண்டும். எங்க இருவரையும் அன்புடன் கவனித்துக் கொள்வார். இப்போது இருவரும் துபாயில் உள்ளனர். எங்களையும் அழைத்தார். ‘அக்கா கடை’தான் எங்களின் உயிர்… இதை பெரிய டிபார்ட்மென்ட் கடையாக மாற்றலாம் என்று எங்களின் மகன் கூறிய போது நாங்க மறுத்துவிட்டோம். 50 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ, அதேபோல எங்கள் ஆயுள் உள்ளவரை இருக்கட்டும். அதன் பிறகு அவரின் விருப்பம்’’ என்றார் அஞ்சாதேவி.நிலை உயர்ந்தாலும் பழசை மறக்காமல், தங்களின் தோற்றத்தை மாற்றாமல் இன்றும் உழைத்து வருகிறார்கள் அஞ்சா தேவி மற்றும் காளிராஜன் தம்பதிகள்.
தொகுப்பு: விஜயா கண்ணன்
