×

கே.வி.குப்பம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து சொத்தை அபகரிக்க முயலும் விஏஓ குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பெண் புகார்

வேலூர், பிப்.2: கே.வி.குப்பம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து சொத்தை அபரிக்க முயலும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர் பெண் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் மனுக்களை பெற்றனர்.
கூட்டத்தில், இறையன்காடு அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்ைத சேர்ந்த சாந்தி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கிராமத்தை சேர்ந்த தேவராஜி, தாயார் ஆண்டாள். எனது தாய் ஆண்டாள் கடந்த 2020 நவம்பரில் இறந்துவிட்டார். அவரது இறப்புக்கு பின்னர் இறப்பு வாரிசு அடிப்படையில் எனக்கு வந்த பூர்வீக சொத்தை எனது மகள் பெயரில் நான் செட்டில்மெண்ட் செய்து கொடுத்தேன். இந்நிலையில் எனது அண்ணன் ஆனந்தனின் மகன் அனிஷ்குமார், டிகே.புரம் விஏஓவாக உள்ளார். அவர், நான் விஏஓவாக உள்ளேன், பூர்வீக சொத்தை உங்களுக்கு தரமுடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். சொத்து பத்திரங்கள், வாரிசு சான்றிதழ்கள் என்னிடம்தான் உள்ளது. நாங்கள் பொதுப்பிரிவு வகுப்பை சேர்ந்தவர்கள், ஆனால் அனிஷ்குமார் தன்னை பிற்படுத்தப்பட்டோர் எனக்கூறி போலி சான்றிதழை பொய்யாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளார். போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், அணைக்கட்டு கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சக்தி என்ற இளைஞர் கை, கால்களில் படுகாயத்துடன் மனு அளிக்க வந்தார். அப்போது, சக்தியின் தாயார் கலெக்டரின் காலி விழுந்து அழுதார். சக்தி அளித்த மனுவில், ‘அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெறும் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக நான் தினமும் நெடுஞ்சாலையில் ஓட்டப்பயிற்சி எடுத்து வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக் மோதி கால், கைகளில் அடிபட்டது. ஆனால் அணைக்கட்டு போலீசார், மோதிய பைக்கை விட்டுவிட்டு வேறு வாகனம் மோதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, மோதிய வாகனம், மோதிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், கடந்த 25ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இலவச செல்போன் வாங்க வந்தோம். ஆனால் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி உரிய பதில் அளிக்காததால் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். மேலும் குடியரசு தினமான அன்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தேசியக்கொடியையும் அவர் ஏற்றவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்தனர். அதேபோல், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு 363 பேர் மனு அளித்தனர்.

Tags : Collector ,grievance meeting ,VAO ,KV Kuppam ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...