×

வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு விரைவில் அனுமதி

கோவை, பிப்.2: வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு விரைவில் அனுமதி வழங்குவது குறித்து வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலை கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,720 மீட்டர் உயரத்தில் 7 வது மலையின் மீது வெள்ளிங்கிரி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தென் கயிலாயம் என்ற சிறப்பு பெற்ற இந்த கோயிலுக்கு 8 மணி நேரம் மலையேறி கிரி மலை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம். குறிப்பாக சித்ரா பவுர்ணமி நாளில் 2 லட்சம் பேர் மலையேறி தரிசனம் செய்வார்கள். கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக சித்ரா பவுர்ணமி மலையேற்றம் நடக்கவில்லை. பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே இந்த கோயில் வழிபாட்டிற்காக திறக்கப்படும். பின்னர், கோயில் நடை மூடப்படும். விசேஷ காலங்களில் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டும் கோயிலுக்கு சென்று வர அனுமதி வழங்கப்படுகிறது.

தற்போது வெள்ளிங்கிரி மலை கோயிலை வழிபாட்டிற்காக திறக்க வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. மாநில அளவில் பல்வேறு பகுதிகளில் மலை கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளிங்கிரி கோயில் திறக்கப்பட்டு மலையேற்றத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். கோயிலுக்கு செல்லும் வனப்பகுதி பாதைகளை சீரமைத்தல், வழிப்பாதை கடைகளுக்கு அனுமதி வழங்குதல், குடிநீர் மற்றும் மூங்கில் கம்புகளை பக்தர்களின் பயன்பாட்டிற்காக வழங்குதல், பக்தர்கள் தங்கும் கூடம் அமைத்தல் போன்ற பணிகள் விரைவில் நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : trek ,
× RELATED அண்ணாமலை நடைபயணம் எந்த தாக்கத்தையும்...