ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டில் மூலதனச் செலவினங்களுக்காக ரயில்வே அமைச்சகத்திற்கு ரூ. 2,77,830 கோடியை ஒதுக்கீடு செய்தார். மேலும் 7 அதிவேக ரயில் தடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் புதிய ரயில் பாதைகள் அமைத்தல், இன்ஜின்கள், சரக்கு வேகன்கள் மற்றும் பயணிகள் பெட்டிகள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளும் அஇடம் பெறும்.
* கடந்த நிதியாண்டில் ரயில்வே அமைச்சகம் ரூ. 2,52,000 கோடி பெற்றிருந்தது. தற்போதைய ஒதுக்கீடு 10.25 சதவீதம் அதிகமாகும். மேலும் இதுவே இதுவரை இல்லாத அதிகபட்ச ஒதுக்கீடாகும். இது தவிர, அமைச்சகத்திற்கு வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரங்களில் இருந்து ரூ. 15,000 கோடி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* பட்ஜெட் ஆவணத்தின்படி, ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ. 3,85,733.33 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செலவினம் ரூ. 3,82,186.01 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நிதியாண்டின் இறுதியில் ரூ. 3,547.32 கோடி உபரி வருவாய் கிடைக்கும்.
* புதிய பாதைகள் அமைத்தல், குறுகிய பாதை அகலப் பாதையாக மாற்றுதல் மற்றும் ஒற்றைப் பாதை வழித்தடங்களில் இரட்டைப் பாதைகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சகத்திற்கு ரூ. 2,77,830 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ரூ. 2,77,830 கோடி ஒதுக்கீட்டில் இருந்து பல்வேறு கட்டுமானம் மற்றும் சொத்து உருவாக்கும் திட்டங்களுக்கு பட்ஜெட் ஆவணம் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் புதிய பாதைகளுக்கு ரூ. 36,721.55 கோடி, பாதை மாற்றத்திற்கு ரூ. 4,600 கோடி, இரட்டிப்பாக்குதலுக்கு ரூ. 37,750 கோடி, நகரும் சரக்கு வாகனங்களுக்கு (இன்ஜின்கள், வேகன்கள் போன்றவை) ரூ. 52,108.73 கோடி மற்றும் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புக்கு ரூ. 7,500 கோடி ஆகியவை அடங்கும். ரயில்வே நெட்வொர்க் முழுவதும் ‘கவச்’ பாதுகாப்பு வசதியை விரிவுபடுத்துவதில் அமைச்சகம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
* கடந்த ஆண்டில் ஓய்வூதியத்திற்கான செலவு ரூ. 58844.07 கோடியாக இருந்தது, இது 2026-27 ஆம் ஆண்டில் ரூ. 74500 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 7 புல்லட் ரயில் தடங்கள் அறிமுகம்
பட்ஜெட்டில் ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களும், மேலும் ஒரு பிரத்யேக சரக்கு வழித்தடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* மேற்கு வங்கத்தில் உள்ள டான்குனிக்கும் குஜராத்தில் உள்ள சூரத்திற்கும் இடையே ஒரு புதிய பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
* 7 அதிவேக ரயில் தடங்கள் விவரம்:
1. மும்பை- புனே
2. புனே- ஐதராபாத்
3. ஐதராபாத்-பெங்களூரு
4. ஐதராபாத்-சென்னை
5. சென்னை-பெங்களூரு
6. டெல்லி-வாரணாசி
7. வாரணாசி-சிலிகுரி
தற்போது, அகமதாபாத் மற்றும் மும்பைக்கு இடையே ஒரு அதிவேக ரயில் வழித்தடத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டு பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்கள் பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பாட்டில் உள்ளன.

எது விலை குறையும்?
* புற்றுநோய் மருந்துகள்
* நீரழிவு உள்பட 7 அரிய நோய்கள் தொடர்பான மருந்துகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவுப் பொருட்கள்
* தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள்
* மைக்ரோவேவ் அடுப்புகளுக்கான முக்கிய பாகங்கள்
* விமானங்களின் என்ஜின்கள் உட்பட அதன் பாகங்கள் அல்லது உதிரிபாகங்கள்
* சூரிய கண்ணாடி மூலப்பொருட்கள்
* அணுசக்தி திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்
* முக்கிய கனிமங்களுக்கான மூலதனப் பொருட்கள்
* வெளிநாட்டு சுற்றுலா தொகுப்புகள்
* வெளிநாட்டு கல்வி
* மதுபானக் கழிவுகள் மற்றும் சில கனிமங்கள்
* காலணிகள்
* செல்போன்கள்
* டேப்லெட்கள்
* விளையாட்டு உபகரணங்கள்
* தோல் பொருட்கள்
* டிவி உதிரி பாகங்கள்
* கேமராக்கள்
* வீடியோ கேம்களின் உற்பத்தி பாகங்கள்
* இவி பேட்டரிகள்
* சோலார் பேனல்கள்

எது விலை அதிகரிக்கும்;
* குறைந்த விலை இறக்குமதி செய்யப்பட்ட குடைகள்
* பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
* ஏடிஎம்/பண விநியோக இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள் மற்றும் உதிரிபாகங்கள்
* வெளிநாட்டுக் குழுக்களுக்கான திரைப்படம் மற்றும் ஒளிபரப்பு உபகரணங்கள்
* இறக்குமதி செய்யப்பட்ட உயிரியல் பூங்கா விலங்குகள் மற்றும் பறவைகள்
* அம்மோனியம் பாஸ்பேட் / நைட்ரோ-பாஸ்பேட் உரங்கள் மற்றும் நாப்தா போன்ற உர உள்ளீடுகள்
* காபி வறுக்கும், காய்ச்சும் அல்லது வழங்கும் இயந்திரங்கள்
* ஆமணக்கு பிண்ணாக்கு
* ஆடம்பர வாட்ச்கள்
* இறக்குமதி மதுபானங்கள்
* சிகரெட்
* பீடி
* பான்மசாலா
* குட்கா
* புகையிலை பொருட்கள்
* இறக்குமதி கேமராக்கள்
* வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்க ரூ. 250 கோடி ஒதுக்கீடு
இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாக்காளர் அடையாள அட்டைகளுக்காக ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தல் தொடர்பான செலவினங்களைச் சரிசெய்வதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் புகைப்பட அடையாள அட்டைகளுக்கான செலவினங்கள் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை தற்போது சுமார் 99 கோடியாக உள்ளது. எனவே ஒன்றிய அரசின் பங்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* 5 பிராந்திய மருத்துவ மையங்கள்
மருத்துவ சுற்றுலா சேவைகளுக்கு இந்தியாவை ஒரு விருப்பமான இடமாக ஊக்குவிப்பதற்காக, தனியார் துறையுடன் இணைந்து ஐந்து பிராந்திய மருத்துவ மையங்களை நிறுவுவதில் மாநிலங்களுக்கு ஆதரவளிக்க ஒன்றிய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இந்த மையங்கள் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்களாக செயல்படும், மருத்துவ சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஒரே குடையின் கீழ் இணைக்கும்.
* கார்பன் பிடிப்பு பயன்பாடு, சேமிப்பு
அடுத்த ஐந்தாண்டுகளில் கார்பன் பிடிப்பு,பயன்பாடு மற்றும் சேமிப்பு ஆகிய தொழில்நுட்பங்களுக்காக ரூ.20000 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் பல்வேறு பயன்பாடுகளில் இந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுடன் உயர் தர தயார் நிலைகைளையும் அடைய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
ஒற்றை பத்திரங்களுக்கு ரூ.100 கோடி
* ஊக்க தொகை
ரூ.1000 கோடிக்கு மேல் ஒற்றை பத்திரங்களை வெளியிடும் நகராட்சி அமைப்புகளுக்கு ரூ.100 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
* சுயசார்பு இந்தியா நிதிக்கு ரூ.4000 கோடி
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, 2026-27 ம் ஆண்டில் சுயசார்பு இந்தியா நிதிக்கு ரூ.4,000 கோடி நிதி திரட்டப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ஐந்து துணைப் பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த ஜவுளித் திட்டத்தையும் அமைச்சர் முன்மொழிந்தார். இது அமெரிக்கா விதித்த 50 சதவீத அதிக வரிகளால் சவால்களை எதிர்கொள்ளும் துறைக்கு உதவக்கூடிய ஒரு நடவடிக்கையாகும்.

* அமைச்சர்கள் சம்பளத்துக்கு ரூ.620 கோடி
2026-27 ஒன்றிய பட்ஜெட்டில், ஒன்றிய அமைச்சர்கள் குழு, அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் அரசு விருந்தினர்களின் உபசரிப்பு, முன்னாள் ஆளுநர்களின் ஓய்வூதியம் போன்ற செலவினங்களுக்காக ரூ.1102 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025-26ல் ஒதுக்கப்பட்ட ரூ.978.20 என்ற திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட இந்த தொகை அதிகமாகும்.
அதன்படி, வரும் நிதியாண்டில் அமைச்சர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.620 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025-26ல் ரூ.483.54 கோடியாக இருந்தது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு 2025-26ல் ரூ.279.74 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 2026-27ம் ஆண்டுக்கு ரூ.256.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்துக்கு 2025-26ல் ரூ.61.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.65 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயலகத்தின் நிர்வாக செலவுகள் மற்றும் ரசாயன ஆயுதங்களுக்கான தேசிய ஆணையத்தின் செலவுகளுக்காக கடந்த 2025-26ல் ரூ.78 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் பிரதமர் அலுவலகத்தின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.68 கோடி நிதி, தற்போது ரூ.73.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2025-26ல் அரசு விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கிற்காக ரூ.6.20 கோடி ஒதுக்கப்பட்ட நிதி, 2026-27 நிதியாண்டில் ரூ.5.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர்களுக்கான செயலக உதவித்தொகைக்காக 2025-26ல் ரூ.1.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தொடர்ச்சியாக 9வது பட்ஜெட்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய வரலாற்றில் இதுவரை எந்த நிதி அமைச்சரும் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததில்லை. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
அவர் 1959 முதல் 1964 வரை 6 முறையும், 1967 முதல் 1969 வரை 4 முறையும் இடைவெளியுடன் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். காங்கிரசை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவரும் வெவ்வேறு பிரதமர்களின் கீழ் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
* மின்னணு உற்பத்திக்கான ஒதுக்கீடு ரூ.40000 கோடி
2026-27 நிதியாண்டில் மின்னணு கூறுகள் உற்பத்தித் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.40,000 கோடியாக உயர்த்த நிதியமைச்சர் முன்மொழிந்தார். 2025 ஏப்ரலில் ரூ.22,919 கோடி செலவில் தொடங்கப்பட்ட மின்னணு கூறுகள் உற்பத்தித் திட்டம், ஏற்கனவே இலக்கை விட இரு மடங்கு முதலீட்டு உறுதிமொழிகளைக் கொண்டுள்ளது. இந்த உந்துதலைப் பயன்படுத்திக் கொள்ள, செலவினத்தை ரூ.40,000 கோடியாக அதிகரிக்க முன்மொழிகிறோம்,என்றார்.
* சிறு நிறுவனங்களுக்கு ரூ.10000 கோடி வளர்ச்சி நிதி
எதிர்கால வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அர்ப்பணிப்புடன் கூடிய சிறு,நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி நிதியை நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளார்.
* வீட்டு வசதி அமைச்சகத்திற்கு ரூ.85 ஆயிரம் கோடி
பட்ஜெட்டில் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு ரூ.85,522 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளுக்கான பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்திற்கு ரூ.900 கோடி வழங்கப்படுகிறது. இது 2025-26 ஐ விட 57 சதவீதம் அதிகமாகும். பட்ஜெட் ஆவணத்தின்படி, பிரதமர் வீட்டுவசதித் திட்டத்திற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மோடி அரசாங்கத்தின் முதன்மை வீட்டுவசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ரூ.12,625 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பயோ பார்மா துறையில் ரூ. 10,000 கோடி முதலீடு
பயோ பார்மா துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீட்டை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது நாட்டின் மருந்து உற்பத்தி துறைக்கு ஊக்கமளிக்கும்.
* 20,000 கால்நடை டாக்டர்கள்
நிர்மலா சீதாராமன் கூறுகையில், 20,000 கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கால்நடை தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் செய்ல்படுத்தப்படும். மீன்வளத்தைப் பொறுத்தவரை, அரசாங்கம் 500 நீர்த்தேக்கங்கள் மற்றும் அமிர்த சரோவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேற்கொள்ளும். மேலும் கடலோரப் பகுதிகளில் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தும், தொடக்க நிறுவனங்கள், பெண்கள் தலைமையிலான குழுக்கள் மற்றும் மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் சந்தை இணைப்புகளை செயல்படுத்தும் என தெரிவித்தார்.
* ஞாயிறன்று தாக்கலான முதல் பட்ஜெட்
ஒன்றிய பட்ஜெட் பெரும்பாலும் வார நாட்களிலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இதன்படி 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், முந்தைய நாளான 27ஆம் தேதி சனிக்கிழமையன்று அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பட்ஜெட் தாக்கல் செய்தார். ஒன்றிய பாஜ அரசு கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தது. கடந்த ஆண்டு சனிக்கிழமை தாக்கல் ஆனது. இதன்படி 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் முதன் முறையாக ஞாயிறன்று தாக்கல் செய்யப்பட்டது.
* 9 பட்ஜெட், 9 புடவை இந்த முறை காஞ்சிபுரம் பட்டு
நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும் புதிய புடவை அணிந்து வருகிறார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யும் போது காஞ்சீபுரம் பட்டுப்புடவை அணிந்து வந்தார். தமிழ்நாட்டின் பன்னெடுங்கால நெசவுப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், கைத்தறி நெசவில் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவையை அணிந்துள்ளார். இது ஊதா நிறத்தில், வெளிர் பொன்னிற பழுப்பு நிறக் கட்டங்களுடன் கூடிய காஞ்சிபுரம் புடவை ஆகும். இதன் காபி பழுப்பு நிறப் பார்டரில் நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு மங்கலகிரி மற்றும் இக்கத் முதல் பொம்காய், காந்தா, மதுபானி உள்ளிட்ட 9 வகை புடவைகளை 9 பட்ஜெட்டிலும் அவர் அணிந்து வந்துள்ளார்.
* நிதி ஒதுக்கீட்டில் நிதி அமைச்சகம் முதலிடம்
ஒன்றிய பட்ஜெட்டில் அதிகமான நிதி ஒதுக்கீடு அமைச்சகங்களில் நிதி அமைச்சகம் முதலிடத்தில் உள்ளது. நிதி அமைச்சகத்திற்கு மட்டும் ரூ.19.72 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.17.22 லட்சம் கோடி வருவாய் செலவினம் மற்றும் ரூ.2.50 லட்சம் கோடி மூலதன செலவினம். மொத்த பட்ஜெட்டில் நிதி அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு மட்டுமே 36.89 சதவீதம். அடுத்த இடத்தை பிடித்துள்ள பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
* உள்துறை அமைச்சகத்திற்கு ரூ. 2.55 லட்சம் கோடி
2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், உள்துறை அமைச்சகத்திற்கு ரூ. 2.55 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ. 2.33 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.
* தளவாட மையங்களுக்கு அருகே 5 பல்கலை நகரம்
முக்கிய தொழில்துறை தளவாட மையங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை அரசாங்கம் அமைக்கும் என 2026-27 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். மேலும், 15,000 மேல்நிலை பள்ளிகளிஜல் உள்ளடக்க ஆய்வகங்களை அமைப்பதற்கு, மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ்க்கு ஆதரவளிக்க நிதி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
* எந்த துறைக்கு எவ்வளவு நிதி?
நிதி ரூ.19.72 லட்சம் கோடி
பாதுகாப்பு ரூ.7.85 லட்சம் கோடி
சாலை போக்குவரத்து ரூ.3.10 லட்சம் கோடி
ரயில்வே ரூ.2.77 லட்சம் கோடி
உள்துறை ரூ.2.55 லட்சம் கோடி
நுகர்வோர், உணவு, ரேஷன் ரூ.2.39 லட்சம் கோடி
கிராமப்புற மேம்பாடு ரூ.1.97 லட்சம் கோடி
ரசாயனம் மற்றும் உரம் ரூ.1.77 லட்சம் கோடி
வேளாண் ரூ.1.40 லட்சம் கோடி
கல்வி ரூ.1.39 லட்சம் கோடி
சுகாதாரம் ரூ.1.06 லட்சம் கோடி
தகவல் தொடர்பு ரூ.1.02 லட்சம் கோடி
ஜல் சக்தி ரூ.94,807 கோடி
வீட்டு வசதி ரூ.85,522 கோடி
அறிவியல், தொழில்நுட்பம் ரூ.38,260 கோடி
* 2047-ஆம் ஆண்டிற்குள் ஒரு வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையையும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தையும் இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா.
* இந்த பட்ஜெட் முற்போக்கானது மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்டது. இது வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உதவும். பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
* வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான ஒரு ஊக்கமளிக்கும் வரைவுத் திட்டம். இந்த பட்ஜெட் இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும், விவசாயிகளுக்கு பாதுகாப்பையும், தொழில்முனைவோருக்கு ஊக்கத்தையும், நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதியையும், தொழிலாளர்களுக்கு மரியாதையையும் வழங்கும். உபி முதல்வர் யோகி.
* ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனையும் உறுதி செய்வதன் மூலம், 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதை நோக்கிய ஒரு படி இந்த பட்ஜெட். பா.ஜ தேசிய தலைவர் நிதின் நபின்.
* மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. உண்மையில், நிதிப் பகிர்வு 41 சதவீதமாக மாற்றப்படாமல் உள்ளது, மேலும் பல மாநிலங்கள் தங்கள் குடிமக்களுக்கான கடமைகளை நிறைவேற்ற போதுமான நிதி இல்லை என்று புகார் கூறியுள்ளன. காங்கிரஸ் எம்பி சசிதரூர்.
* இந்த அரசாங்கம் அளித்த மிகப்பெரிய வாக்குறுதி வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்குவதுதான் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைகள். இந்த அரசாங்கம் 12 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது; அந்த 24 கோடி வேலைகளுக்கு என்ன ஆனது? ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்.
* ஒன்றிய அரசு பட்ஜெட்டில் கர்நாடக மாநிலம் மட்டும் இன்றி தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கர்நாடக முதல்வர் சித்தராமையா.
