- திருத்தணி
- பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து அலுவலகம்
- பொத்தட்டுர்பேட்டை
- அண்ணா பேருந்து
- திருத்தணி-பொஹட்டூர்பேட்டை
திருத்தணி: திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 9 மணியளவில் பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையை சேர்ந்த தடம் எண் டி5 என்ற நகர பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து, திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில், கிருஷ்ணசமுத்திரம் வளைவு பகுதியில் மேடுபள்ளமாக இருந்ததால், எதிர்த்திசையில் திருத்தணி நோக்கி வந்த கரும்பு டிராக்டரை கடந்து செல்ல முடியவில்லை.
இதனால் அரசு பேருந்தை டிரைவர் பின்னோக்கி இயக்கியபோது பிரேக் பழுதால் பிடிக்க முடியாமல் வேகமாக இயங்கியது. இதையடுத்து, அப்பேருந்து சாலையோரத்தில் இருந்த முருங்கை மரத்தின்மீது மோதி, அதே வேகத்தில் மரத்தின் பின்னால் சிமென்ட் ஓடு வேயப்பட்ட வீட்டின் பின்புறத்தில் மோதி நின்றது. இதில், அந்த வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் நொறுங்கி சேதமானது.
அந்த வீட்டின் பின்பக்கத்தில் வேகமாக மோதியதில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. முதலில் வீட்டின் முன்பிருந்த முருங்கை மரத்தில் வேகமாக மோதிய அரசு பேருந்து, பின்னர் வேகம் குறைந்த நிலையில் வீட்டின் பின்பக்க சுவரில் மோதியதால், வீட்டுக்குள் இருந்த உரிமையாளர் முரளி, மனைவி மற்றும் குடும்பத்தினர் எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் விபத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு, மாற்று பேருந்துகளில் பொதட்டூர்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
