×

வீல் சேர் to விண்வெளி

நன்றி குங்குமம் தோழி

உடல் வரம்புகளை தாண்டி நம்ப முடியாத கனவுகளையும் நம்மால் அடைய முடியும் என்பதற்கு மிட்செல்லா பெந்தாஸ் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வரலாற்றின் முக்கிய மைல்கல்லாக, சக்கர நாற்காலியுடன் ஒரு மாற்றுத்திறனாளி பெண் பொறியாளர் விண்வெளி சென்று, “விண்வெளி சென்ற முதல் வீல்சேர் யூசர்” என்கிற சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் மிட்செல்லா பெந்தாஸ், விண்வெளி அனைவருக்கும் சொந்தமானது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பயணத்தை மேற்கொண்டு பெருமை சேர்த்திருக்கிறார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பலவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தப் போட்டியில் தனியார் விண்வெளி நிறுவனங்களும் இணைந்து சாதனை நிகழ்த்தி வருகின்றன. அந்தவகையில் அமேசான் நிறுவனரும், உலக பணக்காரர்களுள் ஒருவருமான ஜெஃப் பெசோஸ், 2000ம் ஆண்டு ‘புளூ ஆரிஜின்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். இவரின் இந்த நிறுவனம், தனியார் விண்வெளிப் பந்தயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாசாவோடு இணைந்து பல்வேறு விண்வெளி ஆராய்ச்சிகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக மாற்றுத்திறனாளிகளை விண்வெளிக்கு அனுப்புவது தொடர்பான ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் பொறியாளராய் பணிபுரியும் 33 வயதான மிட்செல்லா பெந்தாஸ் என்கிற ஜெர்மனி பெண் தேர்வு செய்யப்பட்டார்.

விண்வெளி துறையில் என்ஜினீயரிங் முடித்த இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, கடந்த 2018ம் ஆண்டு மலையேற்றத்தின் போது விபத்து ஏற்பட, இதில் முதுகுத்தண்டு உடைந்து நடக்க முடியாமல் போகவே, சக்கர நாற்காலிக்கு மாறினார். தனக்கு ஏற்பட்ட அந்த விபத்துக்கு பிறகே, மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உலகம் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்பதை உணர்ந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால், இந்த அனுபவம் மிட்செல்லாவை முடக்கிவிடவில்லை. அதற்குப் பதிலாக அவரின் விண்வெளிக் கனவை தீவிரமாக்கியது.

வெறும் கனவு மட்டுமே அவர் காணவில்லை. அதை எப்படி நிஜமாக்குவது என யோசிக்க, ஓய்வு பெற்ற விண்வெளி பொறியாளர் ஹான்ஸ் கோனிக்ஸ்மென் என்பவருக்கு, ‘என்னை போன்ற ஒருவரால் விண்வெளிக்கு செல்ல முடியுமா?’ என கேள்வி கேட்டு, ஆன்லைன் வழியாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகிறார்.இதுவொரு சாதாரண கேள்வி இல்லை, சவாலானது.

இந்தக் கேள்விதான் இன்றைக்கு நாம் வியந்து பார்க்கும் இந்த வரலாற்றுப் பயணத்துக்கு அஸ்திவாரம் போட்ட கேள்வி. ஒரு சாதாரண குறுஞ்செய்தி மிட்செல்லாவை டெக்சாஸ் ஏவுதளத்தில் உள்ள ராக்கெட்டில் உட்கார வைத்தது. மிட்செல்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 10 நிமிட விமானப் பயணத்தை, ப்ளூ ஆரிஜின் நிறுவனத்திற்காக கோனிக்ஸ்மேன் ஏற்பாடு செய்து உதவி செய்த நிலையில், இந்த சாதனையை மிட்செல்லா படைத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புளூ ஆரிஜின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விண்வெளி சுற்றுலாவுக்கு இவரது பெயரும் தேர்வு செய்யப்பட, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலைய ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்ட ராக்கெட் மூலம் மிட்செல்லா உள்பட 6 பேர் விண்வெளிக்கு சென்றனர். இது புளூ ஆரிஜினுக்கு 37வது பயணம் என்றாலும், வெறும் 10 நிமிஷ பயணத்தில் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ராக்கெட் அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டு, சுமார் 100 கிலோமீட்டர் உயரம் சென்று, விண்வெளியின் எல்லையாகக் கருதப்படும் கார்மான் கோட்டைத் தாண்டியதும், அந்த அற்புதம் நடந்திருக்கிறது. ஆம்! புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில் மிட்செல்லா அவரது சக்கர நாற்காலியில இருந்து விடுபட்டு விண்கலத்துக்குள் சுதந்திரமா மிதந்திருக்கிறார். இதுதான் அந்தப் பயணத்தின் உச்சக்கட்ட தருணம். நினைத்துப் பார்த்தால் மிட்செல்லாவின் நீண்ட நாள் கனவு நனவாகிய நிமிடம் அது. தொழில்நுட்ப ரீதியாகவும் இது சாதாரண பயணம் இல்லைதான்.

சுமார் 10 நிமிடம் நீடித்த இந்தப் பயணத்தில் மிட்செல்லா விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், சக்கர நாற்காலி யின்றி மிதந்து தனது நீண்டகால கனவை நிறைவேற்றிக் கொண்டார். சில நிமிட விண்வெளிப் பயணத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பாலைவனத்தில் பாதுகாப்பாக பாராசூட் மூலமாக அவரோடு பயணித்த அனைவருமாக தரை இறங்கினர். இந்தப் பயணத்தின் மூலம் உடல் குறைபாடுகள் கனவுகளுக்குத் தடையில்லை என்பதை மிட்செல்லா பெந்தாஸ் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். இது மாற்றுத்திறனாளிகளையும் விண்வெளிக்கும் அனுப்பும் நடவடிக்கையில் முக்கிய மைல்கல்லாய் இருக்குமென புளூ ஆரிஜின் நிறுவனமும் தெரிவித்துள்ளது.

தரை இறங்கியதுமே, விண்வெளியில் இருந்து பூமியை பார்ப்பது உற்சாகமாக இருந்ததாகவும், இந்த அனுபவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்றும் மிட்செல்லா தெரிவித்தார். விண்வெளி காப்ஸ்யூலுக்குள் நுழைந்ததும், காப்ஸ்யூலில் உள்ள இருக்கையை பயன்படுத்தி, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டதையும் குறிப்பிட்டார்.

புளூ ஆரிஜின் நிறுவனம், மிட்செல்லா விண்வெளி காப்ஸ்யூலுக்குள் சுலபமாக நுழையவும், வெளியே வரவும் தரையில் இருந்து சிறப்பு சாய் தளம் அமைத்திருந்தனர். உள்ளே போன பிறகு, விண்கலத்துக்குள் அவர் தன் சக்கர நாற்காலியில் இருந்து இருக்கைக்கு மாறவும் வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்தப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், விண்வெளி அனைவருக்கும் பொதுவானது என்பதை காட்டுகிறது என்றும் புளூ ஆரிஜின் நிறுவனம் தெரிவித்திருப்பதுடன், எதிர்காலத்தில் இனி மாற்றுத்திறனாளிகளுக்கான விண்வெளி பயணங்களை வடிவமைக்க இதுவொரு முன்னோட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மிட்செல்லாவின் பயணம் உடல் குறைபாடுகள், கனவுகளுக்கு தடையில்லை என்பதை உலகத்துக்கு அழுத்தமாக நிரூபித்திருக்கிறது. இவரின் தனிப்பட்ட இந்த அனுபவத்தைத் தாண்டி, இந்தப் பயணம் உலகத்துக்கு ஒரு பெரிய செய்தியை சொல்கிறது. விண்வெளி அனைவருக்கும் சொந்தமானது என்கிற செய்தியே அது. முக்கியமாக இது வெறும் டூரிஸ்ட் பயணம் கிடையாது. ஒரு குறியீட்டு நிகழ்வு. இந்த நிகழ்வின் வழியாக, இனி நாம் அனைவரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத்தை எப்படியானதாக வடிவமைக்கப் போகிறோம் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Tags : Kungumam Dozhi ,Mitchella Pentas ,
× RELATED அப்பத்தா’ஸ் அடுப்படி