நன்றி குங்குமம் தோழி
ஜன்னலை காற்று வருவதற்கும், வெளிச்சம் வருவதற்கும் மட்டுமா பயன்படுத்துகிறோம்? சில நேரங்களில் வேடிக்கைப் பார்க்கவும் தானே பயன்படுத்துகிறோம்.அப்படித்தான் மனோகரிக்கு அந்த ஜன்னல் மிகவும் பிரியமானதொன்றாகிவிட்டது.இந்த வீட்டிற்கு அவள் உத்தண்டராமனுக்கு மனைவியாகி, மஞ்சள் தாலியுடன் மருமகளாக வந்தபோது அவள் கண்ணில் பட்டது அந்த ஜன்னல்தான். அந்த ஜன்னலில் மத்திய உடல்வாகுள்ள ஒரு ஆள் தாராளமாகக் கால்களை கால்வாசி மடக்கி உட்கார்ந்து பக்கவாட்டில் சாய்ந்து வேடிக்கை பார்க்கும் அளவிற்கு அகலமாகவே இடம் இருந்தது.
‘‘ஏய் புது பொண்டாட்டி… என்ன? எப்போ பார்த்தாலும் அந்த ஜன்னலையே கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்க?” உத்தண்டராமன் அவளிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இது.பலமுறை இந்தக் கேள்வியையே அவன் மாற்றி மாற்றி கேட்டிருக்கிறான். ஆரம்பத்தில் இந்த ஒற்றைக் கேள்விக்கு அவளிடம் ஒரு கற்றை பதில்கள் இருக்கும்.‘‘அதோ அந்த மேகத்தைப் பாருங்களேன்… அதோ அந்த காகத்தைப் பாருங்களேன்… தூரத்துல தெரியுற கோபுரம்தான் எவ்ளோ அழகா இருக்கு” என்று எதையாவது, எந்தக் காட்சியையாவது பதிலாக மாற்றிவிடுவாள். இப்போது அவன் அந்த ஜன்னலை பற்றியெல்லாம் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. இவளும் எந்தப் பதில்களையும் சொல்வதில்லை.
சில நேரம் அவன் எரிச்சலாய் பார்ப்பான். இவள் அதற்கு பதிலாக ஒரு குறுநகையை பரிசளிப்பாள். அவளுடைய எண்ணமெல்லாம், ‘‘அம்மா வீட்டில் இளவரசி போல இருந்தோமே, இங்க வந்து இப்படி கஷ்டப்படுறோமே” என்பதுதான்.சுதந்திரம் பறிபோய்விட்டதாக ஓர் உணர்வு. ஒருமுறை ஜன்னலில் நிலா தெரிந்தது. ‘‘எவ்ளோ அழகு” என்று ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது மிகவும் சோர்வாய் உள்ளே நுழைந்த உத்தண்ட ராமன், ‘‘காபி கொண்டா ” என்று சொல்லிவிட்டு முகம் கழுவி வந்தான்.நிலவை ரசித்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் அவன் காபி கேட்டது விழவில்லை.
முகம் கழுவி வந்தவனுக்கு ஜன்னலில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவளை பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.‘‘அங்க என்னடி பராக்கு பார்த்துட்டு இருக்க? இங்க ஒருத்தன் காபி கேட்டு அரை மணி நேரமாச்சு. காதுல விழுந்துச்சா இல்லையா?”அவன் போட்ட சத்தம் வீடே இடிந்து விழுவதைப் போல் இருந்தது.
திருமணமாகி சில மாதங்களிலேயே இப்படி மாறிவிட்டாரே? நம்மை வெறுத்துவிட்டாரோ?நம்ம அப்பா போல் இல்லை இவர்… அவளுக்குள் ஆயிரம் கேள்விகள்.பயந்து, கண்கள் கலங்க, உடல் நடுங்க சமையலறை நோக்கி ஓடினாள்.அவளை அறியாமலே கண்களில் நீர் தாரைத் தாரையாக வழிந்தது.
காபி கொடுத்து விட்டு பேசாமல் போய் படுத்துக் கொண்டாள்.அவன் தயாராய் இருந்த சப்பாத்தியை சாப்பிட்டுவிட்டு அவனும் உறங்கிப் போனான்.ஆனால், மனோகரிக்கு தூக்கம் வரவில்லை. அவளது அப்பா, அம்மா, அவள் பிறந்த வீடு என்று நினைவுகள் வந்து அலைக்கழித்தது.அப்பா வீடு கட்டும் போது மனோகரியை கேட்டு கேட்டுத்தான் எந்த விஷயத்தையும் செய்தார். அவள் வீட்டு ஜன்னல் கூட அவளது எண்ணம் போல் வைத்தார். அதனால் தான் இங்கேயுள்ள ஜன்னல் அந்நியமாய் படாமல் அவளுக்குப் பிடித்துப் போனது. இதே நிலாவைத்தான் அவள் பிறந்த வீட்டு ஜன்னலில் ஒருநாள் ரசித்துக்கொண்டிருந்தாள்.
அவளது அம்மா டிபன் சாப்பிட அழைத்தும் இவள் காதில் விழாமல் நிலவை ரசிப்பதைப் பார்த்த அப்பா, ‘‘மனோகரி, அம்மா சாப்பிட கூப்பிடுறாங்கம்மா” என்றார்.
‘‘கொஞ்ச நேரம்பா ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள். ‘‘அப்படி என்னதான்டா கண்ணு பாக்குற?” என்று அவரும் எட்டிப் பார்த்தார்.நிலா பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.‘‘அப்பா, நான் நிலாவைப் பத்தி ஒரு கவிதை சொல்லட்டுமா?” என்றாள் முகம் நிறைய மகிழ்ச்சியை பூசிக்கொண்டு.‘‘அடடே, என் ராசாத்திக்கு கவிதை எழுதக் கூடத் தெரியுமா? எங்க சொல்லு சொல்லு” என்று ஆர்வமானார்.
‘‘ஆமா, அப்பாவும் பொண்ணும் அப்படி என்னதான் பண்றீங்க சாப்பிடாமக்கூட?” என்று கேட்டுக்கொண்டே தட்டில் சூடாக இட்லியை எடுத்துக்கொண்டு அம்மா வந்தாள். அவள் வருவதற்கும் மனோகரி கவிதை சொல்வதற்கும் சரியாக இருந்தது.‘‘அப்பா சொல்றேன்…” என்று தொண்டையை செருமிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.
‘‘இரவில் கண் விழித்து
எதைத் தேடுகிறாய்
நிலவே?,
பகலில் தொலைந்த உன்
எழிலையா?!!”
‘‘எப்படி?” என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு சிரித்தாள்.
‘‘அடேங்கப்பா சூப்பர் டா” என்று அப்பா கொஞ்சிவிட்டு, அம்மா கையில் வைத்திருந்த இட்லியை வாங்கிக்கொண்டே,‘‘நானே எம்பொண்ணுக்கு ஊட்டிவிடுறேன்” என்று ஊட்ட ஆரம்பித்துவிட்டார். ‘‘இவள் ஒண்ணும் சின்னப் பாப்பா இல்லைங்க. காலேஜ் முடிச்சிட்டா. ரொம்ப தான் செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க” என்ற அம்மாவின் பேச்சை அவர்கள் சட்டை செய்யவில்லை.
இந்த நினைவுகள் அவளது இதயத்தில் ஏக்கமாய் சுழன்றது. கணவனிடம் அந்தக் கவிதையை சொல்ல நினைத்தவள் அவன் போட்ட சத்தத்தில் நிலை குலைந்து போனாள்.‘‘ச்சே… ரசனையே இல்லாதவர்” என்று எண்ணிக்கொண்டே தூங்கிப்போனாள். அதன் பிறகு அந்த ஜன்னல் பக்கம் அவள் போவதே இல்லை. ஜன்னல் வழியே எப்போதும் கேட்கும் வாகன ஒலிகளும், எப்போதாவது கேட்கும் பறவைகளின் ஒலிகளும் அவளை ஜன்னல் பக்கம் ஈர்த்தது. ஏன் ஒரு சிட்டுக்குருவி கூட வந்து எட்டிப் பார்த்து, ‘‘எங்கே காணோம் மனோகரி?” என்று தேடிவிட்டுப் போனது.
பிறந்த வீட்டுக்குப் போய் சில நாட்கள் இருந்துவிட்டு வந்தாள். வரும்போது அம்மா வீட்டிலேயே இருந்துவிடலாமா என்று கூட நினைத்துக்கொண்டாள். கோடை காலம் ஆரம்பித்துவிட்ட ஓர் காலைப் பொழுது…
நீண்டஇடைவெளிக்குப் பிறகு ஜன்னல் வழியே பார்த்தவள் கண்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. கண்ணம்மா பாட்டியின் பெட்டிக்கடையை ஒட்டிய மரத்தில் சரக்கொன்றைப் பூக்கள் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.இவளுக்கு காற்றில் பறப்பது போல் ஓர் உணர்வு. கணவனை அழைத்துக் காட்டலாமா? வேண்டாமா?யோசித்தாள்.‘‘இது ஒரு அதிசயமா?” என்று கேட்பார். வேறென்ன தெரியும் அவருக்கு? ரசனையே இல்லாமல் கூட இந்த பூமியில் வாழமுடியுமா?அதான் வாழ்கிறாரே உத்தண்ட ராமன் என்று அவளுக்குள்ளேயே புலம்பினாள்.
இதுவே அப்பாவிடம் காட்டினால், ‘‘எவ்ளோ அழகு பாரேன். அப்படியே உன்ன மாதிரி” என்று என் கன்னம் கிள்ளிக் கொஞ்சியிருப்பார்.மாமனாருக்கும் மருமகனுக்கும் ஏணி வச்சாக் கூட எட்டாது. ஆனா, இந்தக் கண்ணம்மா பாட்டி கொடுத்து வச்சவங்க. அந்த மரத்தை எவ்ளோ நேசிச்சி, ரசிச்சி வளர்க்குறாங்க. கொடுத்து வச்ச மரம். எவ்ளோ பூக்கள். ஆஹா… சரஞ்சரமாய். பூக்கள் என்றாலே அழகுதான். அதிலும் இந்த சரக்கொன்றைப் பூக்களுக்கு கூடுதல் அழகு.மனோகரியின் எண்ண ஓட்டங்கள் இதுதான் என்று இல்லாமல் தாறுமாறாக ஓடியது.உத்தண்டராமன் வேலைக்குப் போன பின் சமையல் வேலை, துணி துவைக்கும் வேலை எல்லாம் முடித்துவிட்டு சும்மா தானே இருக்கிறோம். அப்படியே காலார அந்தக் கண்ணம்மா பாட்டி கடை வரைக்கும் போய் அந்த மரத்தோட அழக பக்கத்துல இருந்து ரசிக்கணும் என்று முடிவெடுத்து வேலைகளை சீக்கிரம் முடித்தாள்.
அம்மாவிடமிருந்து அழைப்பு.மொபைலை எடுத்து காதில் வைத்து வழக்கம் போல், ‘‘என்ன சமையல், மாப்பிள்ளை எப்படி இருக்கார். நல்லா பாத்துக்குறாரா? நீயும் மாப்பிள்ளை மனசு நோகாம நடந்துக்கோ” என்றெல்லாம் பேசி முடித்தாயிற்று.‘‘அம்மா என்ன கொஞ்சம் பேசவிடேன்” என்று கத்தினாள்.‘‘ஏன்டி கத்துற? நீ இங்க இருக்குற மாதிரி செல்லமா அங்க இருக்கணும்னு நினைக்காத. அது உன் வீடு. உன் புருஷன் தங்கமானவரு.
இத்தனை நாளா நீதான் அவரை குறை சொல்லிக்கிட்டு இருக்கியே தவிர அவர் உன்னப்பத்தி ஒரு வார்த்தை எங்ககிட்ட குறையா சொன்னதில்ல தெரியுமா?”‘‘சரி, அப்பா கிட்ட கொடு!”‘‘கொடுக்குறேன். உடனே மூஞ்சிய தூக்கி வச்சிக்காத. நீ நல்லா இருக்கணும்னு தான் சொல்றேன். இந்த வீட்ல நீ இளவரசி மாதிரி இருந்தேன்னு அவர்கிட்ட அடிக்கடி சொல்லாத. அது அவருக்கு எரிச்சல்தான் கொடுக்கும். அந்த வீட்ல ராணி மாதிரி நீ இருக்கணும்னா உன் புருஷன மதிச்சு நடந்துக்கோ. இந்தா உங்க அப்பா கிட்ட கொடுக்குறேன்…”‘‘என்னம்மா மனோகரி? நல்லா இருக்கியா?”
‘‘ம்…”
‘‘அம்மா ஏதோ கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாளே? அவ மேல கோவப்படாதமா… அவ பேசுனதுதான் சரி. சரியா?”‘‘ம், சரிப்பா… அப்புறம் பேசுறேன்.”போனை வைத்துவிட்டு கண்ணம்மா பாட்டியின் கடை நோக்கி நடந்தாள்.தூரத்திலிருந்தே சரக்கொன்றை அவளை வரவேற்றது.அருகில் சென்றதும் கீழே உதிர்ந்து கிடக்கும் பூக்கள் மெது மெதுவென்று பாதங்களை கூசச் செய்தது. இவள் அந்தப் பூக்களை ரசித்துக்கொண்டே நிற்பதைப் பார்த்த கண்ணம்மா பாட்டி, ‘‘என்ன கண்ணு பாக்குற? என்ன வேணும்? சோடா கீடா வேணுமா? இந்த வெயிலு என்னா கொளுத்து கொளுத்துது பாரு” என்றாள்.
‘‘இல்ல பாட்டி… இந்த மரம், பூ…”என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னே, ‘‘ஆமாம் மா, இந்த மரத்தை வெட்டி வீசுடான்னா கேக்க மாட்டேங்குறான். எவ்ளோ குப்ப பாரு. கூட்டி அள்ள முடியுதா கர்மம். இடுப்புதான் நோகுது” என்று விளக்கமாரைத் தேடினாள் பாட்டி.மனோகரிக்கு தலை சுற்றிவிட்டது. ‘‘இவ்ளோ அழகான மரம், பூக்கள்னு நாம ரசிச்சு பாக்குறோம். ஆனா, இதுவே இவங்களுக்கு சுமையா இருக்குதே” என்று நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
அம்மா சொன்ன அறிவுரைகள் எல்லாம் ஏனோ நினைவுக்கு வந்தது. மொபைலை எடுத்து உத்தண்டராமனுக்கு அழைத்தாள்.‘‘சொல்லு மனோ…”‘‘எப்போ வர்றீங்க?”‘‘இதோ கிளம்பிட்டேன். ஏம்மா?”‘‘ஒன்னுல்ல… வாங்க காபி போட்டு ரெடியா வைக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே ஜன்னலில் பார்த்தாள்.சரக்கொன்றை மரக்கிளைகளும், பூக்களும் காற்றில் ஆட, கண்ணம்மா பாட்டி ஒரு கூடை நிறைய பூக்களை கூட்டி அள்ளிக் குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டிருந்தாள் இது சரக்கொன்றை பூக்கும் காலம்.
தொகுப்பு: செந்தில்குமார் அமிர்தலிங்கம்
