×

காலம் மாறினாலும் பாரம்பரியம் என்றுமே மாறக்கூடாது!

நன்றி குங்குமம் தோழி

சென்னையில் மார்கழி மாதம் என்றால் விழாக்காலம் என்று சொல்லலாம். இங்குள்ள அனைத்து சபாக்களிலும் பரதம், வீணை, பாட்டு, வயலின் என பல கலைஞர்களின் இசை விருந்துக்கு பஞ்சமே இருக்காது. தைத் திருநாளான பொங்கல் வரை இந்த நிகழ்வுகள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு விழா நிறைந்த மாதத்தில் தன்னுடைய பரதம் மூலம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தார் பரதக் கலைஞர் ஸ்ருதி உமயாள். காரணம், இவர் பந்தநல்லூர் பரதக் கலையில் பிரசித்திப் பெற்றவர். தன் அழகிய முக பாவனைகள் மூலம் நடனம் புரியாதவர்களுக்கும் புரியும் வகையில் இவரின் நடனம் இருக்கும் என்பதுதான் சிறப்பம்சம்.

‘‘நான் அடிப்படையில் கிளாசிக்கல் பரதக் கலைஞர். என்னுடைய ஸ்டைல் பந்தநல்லூர் பாணி பரதம். மதி பத்ம மீனாட்சி சித்தரஞ்சன்தான் என்னுடைய குரு. கடந்த 20 வருடமாக அவர்களின் நடனப் பள்ளியில் நான் பயின்று வருகிறேன். 2012ல் அரங்கேற்றம் செய்தேன். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் மார்கழி திருவிழாவில் தவறாமல் பங்கேற்று வருகிறேன். அதற்கு முன் சபாக்கள், வெளிநாடுகளில் என் நடன நிகழ்ச்சியினை அரங்கேற்றி இருக்கிறேன். மேலும், என் நடனப் பள்ளி பயிற்சி சார்பாக நடைபெறும் குழு நடனங்கள் மற்றும் நடனப் போட்டிகளிலும் பங்கு பெற்று இருக்கிறேன். என்னுடைய நடனப் பள்ளியில் என் திறமையை பாராட்டி எனக்கு நாட்டிய பூஷணம் என்ற விருதினை அளித்து கவுரவித்தார்கள்’’ என்றவர், நடனக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் அவர்களின் வழிகாட்டுதல் கீழ் பரதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

‘‘பரதத்திற்கு தாளம் ரொம்ப முக்கியம் என்பதால், நட்டுவாங்கம் இசைக்கருவியை, மிருதங்க வித்வான் டாக்டர் குரு பரத்வாஜ் மற்றும் பந்தநல்லூர் பாண்டியன் அவர்களிடம் பயின்று வருகிறேன். நடனப் பள்ளியில் பயில வரும் மற்ற மாணவர்களுக்கும் நடனம் சொல்லிக் கொடுக்கிறேன். வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கிறேன். இதற்கிடையில் திருமணம், குழந்தை என்றானதால் சில காலம் நடனப் பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை.

குழந்தைக்கு ஒரு வயதான பிறகு மீண்டும் என்னுடைய பயிற்சிப் பள்ளியில் என்னை இணைத்துக் ெகாண்டேன். அந்த சமயத்தில் ‘அனன்யா ஸ்கூல் ஆப் பைன் ஆர்டஸ்’ நிறுவனம் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அதற்கு விண்ணப்பித்தேன். வாய்ப்பும் கிடைத்தது. ‘சகி’ என்ற தலைப்பில், நட்பு குறித்து பந்தநல்லூர் ஸ்டைலில் என்னுடைய நடனம் இருந்தது. அதைப் பார்த்து என்னுடைய முக பாவனை மற்றும் நடனம் அருமையாக வெளிப்பட்டதாக பலரும் பாராட்டினார்கள்.

ஆறு வயதில் பரதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். சின்ன வயசில் நான் பரத முத்ராக்களை கையில் பிடிப்பதைப் பார்த்து எனக்கு நடனம் மேல் ஈடுபாடு இருப்பதை புரிந்துகொண்டு, என் பெற்றோர் என்னை நடனப் பயிற்சியில் சேர்த்துவிட்டார்கள். எங்க வீட்டில் யாரும் பரதம் பயின்றதில்லை.

பரதத்தில் 24 பாணி உள்ளது. அதில் ஒன்று பந்தநல்லூர் பாணி. இந்த நடன அமைப்பினை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்தான் அறிமுகம் செய்தார். அவரிடம் இந்தக் கலையை பயின்றார் ருக்மணி அருண்டேல். அதன் பிறகு ருக்மணி அவர்கள் கலா‌ஷேத்திரா பெயரில் நடனப் பள்ளியினை நிறுவினார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சிஷ்யர் என் குருவோட குரு. அவங்க பந்தநல்லூர் பாணி பரதத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாங்க.

என்னைப் பொறுத்தவரை நடனக் கலையினை முழுதும் உள்வாங்கினால்தான் அந்தக் கலையின் பாணியினை நம்மால் முழுமையாக உணர முடியும். எப்படி ஊறுகாய் ஊற ஊற சுவை அதிகமாகுமோ, அதேபோல்தான் நடனக் கலையை நாம் மனதால் உள்வாங்கினால்தான் அதனை முழுமையாக வெளிப்படுத்த முடியும். அதைத்தான் நான் இவ்வளவு ஆண்டுகளாக செய்து வந்தேன். என்னுடைய நடனம் மூலம் நான் சொல்ல வரும் விஷயத்தை பார்வையாளர்கள் உணர்ந்து என்னிடம் அது பற்றி சொல்லி பாராட்டும் போது, நடனக் கலை என்னுள் எவ்வாறு ஊறியுள்ளது என்பதை புரிந்து ெகாள்ள முடிந்தது. நான் என் நடனத்தில் அபிநயம் மற்றும் முக பாவத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்’’ என்றவர் 2019ல் சிறந்த நடனக் கலைஞர் என்ற விருது பெற்றுள்ளார்.

‘‘இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய சிந்தனை பலமடங்காக விரிவடைய வேண்டும். முன்பு பாரம்பரிய பாணியை மட்டுமே பின்பற்றி நடனமாடுவார்கள். அதாவது அலாரிப்பு, சப்தம், வர்மம், பதம், தில்லானா என்று இருக்கும். இன்று அப்படி பார்க்க யாருக்கும் பொறுமை இல்லை. நடனம் கதை வடிவிலோ அல்லது அதில் ஒரு கரு இடம் பெற்றிருந்தால் தான் பார்க்க விரும்புகிறார்கள்.

அதற்கு ஏற்ப நாங்களும் நடன அமைப்பை மாற்றி தரும் போது என் குரு சொல்வது ஒன்று தான். பாரம்பரியம் என்றுமே மாறக்கூடாது. அதைத்தான் நான் என் நடனத்தில் பிரதிபலித்து வருகிறேன். பாரம்பரியத்தை, நடன பாணியை மாற்றாமல் என்ன கரு கொண்டு வரலாம் என்று என் நடனத்தை அமைத்து வருகிறேன். இந்த வருடம் ‘ருத்ரா’ தலைப்பில் சிவன் மேல் காதல் வயப்படும் ஒரு பெண்ணைக் குறித்து ஒரு நடனம் அமைத்திருந்தேன். என்னுடைய அடுத்தடுத்த நடனங்கள் இது போன்று ஒரு கருவோடுதான் இருக்கும்.

தற்போது நான் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். நடனத்தில் மேலும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். நட்டுவாங்கம் முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். நான் முழுமையாக தயாரான பிறகு நடனப் பயிற்சி பள்ளி ஒன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறேன். பந்தநல்லூர் பாணி பரதத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். காரணம், இந்த பாணியில் நடனமாடுபவர்கள் ஒரு சிலரே என்பதால் இந்தக் கலையை பற்றி மக்களிடம் கொண்டு போக வேண்டும்’’ என்றார் ஸ்ருதி உமயாள்.

தொகுப்பு: நிஷா

Tags : Marghazi month ,Chennai ,Bharam ,Veenai ,Chatu ,Violin ,Pongal ,Thit ,Thiruandala ,
× RELATED சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!