×

சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு: டிரோன்கள் பறக்க தடை

சிவகங்கை: சிவகங்கையில் இன்று (ஜன.30), நாளை (ஜன.31) ஆகிய 2 நாட்கள் கள ஆய்வுப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல்புதூரில் சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தியடிகள், ஜீவா ஆகியோர் சந்தித்த இடத்தில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு காரைக்குடியில், திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட வீறுகவியரசர் முடியரசனார் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு காரைக்குடி அழகப்பா அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கல்லூரியை திறந்து வைக்கிறார். தொடர்ந்து காலை 10.10 மணிக்கு காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நிறைவு பெற்ற பணிகளை தொடங்கி வைத்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகிறார். பின்னர் 11.15 மணிக்கு சட்டக்கல்லூரி அருகே புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.

பகல் 11.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு காரில் புறப்படுகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி அவர் பங்கேற்கும் இடங்களில் தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர தயால், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சேகர் தேஷ்முக்த், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ்புனியா மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

முதலமைச்சருக்கு, சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று சிவகங்கை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதலமைச்சர் வருகையையொட்டி இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்து உள்ளனர்.

Tags : Chief Minister ,Chivaganga ,K. Stalin ,Shivaganga ,MLA ,Sivaganga ,Madurai ,Chennai ,Sivaganga District Tirupathur ,
× RELATED தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம்...