×

தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிரடி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.9520 உயர்வு: பவுன் ரூ.1,34,400 என்ற புதிய உச்சத்தை எட்டியது, வெள்ளியும் கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்தது. இதன் மூலம் பவுன் ரூ.1 லட்சத்து 34,400 என்ற இமாலய உயரத்தை எட்டி பிடித்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் எகிறியது. இந்த விலை உயர்வால் பெண்கள் கடும் அதிர்ச்சிடைந்துள்ளனர். தங்கம் விலை என்பது கடந்த ஆண்டு இறுதியில் இருந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு என்பது இந்தாண்டும் தொடர்ந்து வருகிறது. இப்படி இருந்து வரும் வேளையில் கடந்த வாரமாக தங்கம், வெள்ளி விலை என்பது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் தங்கம், வெள்ளி விலை எகிறி புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பெரிய அளவில் உயர்வு என்பது எப்போதாவது ஒரு நாள் இருக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கம், வெள்ளி விலை காலை மற்றும் பிற்பகலில் விலை ஏற்றம் என்று இருந்து கொண்டிருக்கிறது. அதுவும், பவுனுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. நேற்று முன்தினம் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தங்கம் விலை ஏற்றம் கண்டது.

அதாவது தங்கம் விலை நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.370 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,330க்கும், பவுனுக்கு ரூ.2,960 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,22,640க்கும் விற்கப்பட்டது. பின்னர் பிற்பகலில் மேலும் தங்கம் விலை அதிகரித்தது. பிற்பகலில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு கிராம் 15,60க்கும், பவுனுக்கு ரூ.2,240 அதிகரித்து. ஒரு பவுன் ரூ.1,24,880க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் காலை, மாலை என தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,200 உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் வெள்ளி விலையும் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.13 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.400க்கும், கிலோவுக்கு ரூ.13 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி ரூ.4 லட்சத்துக்கும் விற்பனையானது. அதே நேரத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.18 ஆயிரத்து 640 உயர்ந்து நகை வாங்குவோரை கலக்கமடைய செய்தது.

இப்படியாக விலை ஏறிச்சென்றால், தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ? என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவியது. இனிவரும் நாட்களிலும் விலை ஏற்றம் இருந்தாலும், சிறிதளவு தான் குறையும் என்று சொல்லப்படுகிறது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று காலையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1190 அதிகரித்து ஒரு கிராம் ரூ.16,800க்கும், பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உயரத்தை எட்டி பிடித்தது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் நேற்று காலையில் அதிரடியாக உயர்வை சந்தித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.425க்கும், கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் அதிகரித்து, பார் வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம், வெள்ளி விலை இப்படி வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது விசேஷத்திற்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே விலை உயர்ந்தால் தங்கம் ஏழை, எளிய மக்களுக்கு எட்டா கனியாகி விடுமோ? என்ற ஏக்கம் தற்போது உருவாகியுள்ளது. அதே ேநரத்தில் இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். அப்படியே குறைந்தாலும் சிறிய அளவுக்கு தான் குறையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

* 60 நாளில் பவுன் ரூ.28,870 உயர்வு
தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் (ஜனவரி 1ம் தேதி) ஒரு பவுன் ரூ.96,560க்கு விற்கப்பட்டது. தொடந்து அதிகரித்து நேற்று ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34,400க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை 60 நாளில் பவுனுக்கு ரூ.28,870க்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை ஜனவரி 1ம் தேதி ஒரு கிராம் ரூ.196க்கு விற்கப்பட்டது. நேற்று வெள்ளி விலை கிராம் ரூ.425 ஆக விலை உயர்ந்தது. இதன் மூலம் வெள்ளி விலை 60 நாளில் கிலோவுக்கு 2 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஒன்றிய அரசு கட்டுப்படுத்த கோரிக்கை
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதே அளவுக்கு மக்களின் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. ஒன்றிய அரசுப் பணிகளில் புதியவர்களை வேலைக்கு எடுப்பது குறைந்துள்ளது. அரசு நிறுவனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. இந்தநேரத்தில் தங்கம் விலை தினம், தினம் உச்சத்தை தொட்டு வருகிறது.

ஏழைகளுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. நடுத்தர மக்கள்தான் தங்கம் மீது மோகம் கொண்டுள்ளனர். ஆனால் இந்த மோகமும் தற்போது குறையத் தொடங்கிவிட்டது. இதனால் ஒன்றிய அரசு தங்க மார்க்கெட்டில் ஒரு நிலைத்தன்மையை உருவாக்க வேண்டும். பதுக்கல்காரர்களிடம் இருந்து தங்கத்தை வெளிமார்க்கெட்டில் விட வேண்டும். தங்கம் விலையை குறைக்க ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்களிடம் இருந்து எழுந்துள்ளது.

Tags : Chennai ,Baun ,Himalayan ,
× RELATED 2016 முதல் 2022ம் ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு