சென்னை : 125 நாட்கள் வேலை என்பது உத்தரவாதம் அல்ல; அது ஒரு மாயை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில், “விக்சித் பாரத்-ஜி ராம் ஜி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின் மூலம், கிராமப்புறத்தில் 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
தவறு, மாண்புமிகு குடியரசுத் தலைவரே!
சமீபத்திய ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை 50 நாட்கள்தான்.
50 நாள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதற்கு தேவை குறைந்தது காரணம் அல்ல, ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததே இதற்கு காரணம்.
ஆண்டுக்கு 50 நாட்கள் வேலை என்பது எப்படி மாயாஜாலமாக 125 நாட்களாக அதிகரிக்கும்?. 2024-25, 2025-26 ஆண்டுகளில் வழங்கிய நிதியை விட ஒன்றிய அரசு இரண்டரை மடங்கு அதிக நிதியை வழங்குமா?.
125 நாட்கள் வேலை என்பது உத்தரவாதம் அல்ல; அது ஒரு மாயை. 125 நாட்கள் வேலை என்ற வெற்று வாக்குறுதியுடன் ஏன் ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது: ஆண்டுக்கு 365 நாள் வேலை என கூறலாமே,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
