கோவை, ஜன. 29: மதுரையை சேர்ந்தவர் கனகராஜ் (43). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற கனகராஜ், கடந்த 2017ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். இதையடுத்து கோவை குனியமுத்தூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கிருந்து குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல பணியில் இருந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு போலீஸ் கமிஷனர் கண்ணன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மணிவர்மன் மற்றும் அதிகாரிகள், போலீசார் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து கனகராஜின் குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து சென்றனர். அங்கு போலீஸ் மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
