×

பாதுகையின் பெருமை

பகுதி 15

வியக்க வைக்கும்படி இருக்க கூடியவள் தானே ரங்கநாதனின் பாதுகை? தன்னுள்ளே எண்ணிலடங்கா நிறங்களையும், திறங்களையும் கொண்டு பெருமாளின் நிரந்தர செல்வமாக, நீங்காத செல்வமாக இருந்து கொண்டு, நமக்கும் சகல விதமான ஐஸ்வர்யங்களையும், காமதேனுவை போல் வழங்கி கொண்டே இருக்கிறாள், பாதுகாதேவி. பாதுகையை போலவே, பாதுகையை கொண்டாட ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் அருளி இருக்கும் ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் 30வது பத்ததியான சித்ரபத்ததியில், உள்ள ஸ்லோகங்களில் பல விதமான சித்திரங்கள், வியக்க வைக்கும் வாக்கிய அமைப்புகள், முன்பின் சேர்க்கவல்ல வரிகள் போன்றவை உள்ளன. இந்த பத்ததியில் பாதுகையோடு சேர்ந்து அதன் பெருமையை அழகாய் தன் கவி நடையும் கற்பனை நடையும் கைகோர்க்க நம்மை எல்லாம் வியப்பின் எல்லைக்கே அழைத்து சென்று விடுகிறார், ஸ்வாமி தேசிகன்.

“ஸ்ருணு தே பாதுகே! சித்ரம் சித்ராபிர் மணிபிர் விபோ:
யுக க்ரம புவோ வர்ணாந் யுகபத் வஹஸே ஸ்வயம்’’

பாதுகையை அழைத்து அந்த பாதுகையிடமே, அவளை பற்றிய ஒரு வியக்க வைக்கும் விஷயத்தை இந்த பாசுரத்தின் வழி அருளி இருக்கிறார். ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு வண்ணம் எடுத்து கொள்ள கூடியவர் தானே பெருமாள்? க்ருதயுகத்தில் வெண்மை நிறம், த்ரேதாயுகத்தில் சிகப்பு நிறம், துவாபரயுகத்தில் பொன்னிறம், கலியுகத்தில் கருப்பு நிற திருமேனியோடும் காணப்படுகிறான் பகவான். அப்பெருமான் அப்படி யுகங்கள் தோறும் ஏற்கும் வண்ணத்தை, பாதுகையே உன் மீது பதிக்கப்பட்டிருக்கும் ரத்தின கற்களை கொண்டு நீ ஒரேயுகத்தில் காட்டி
தருகிறாயே!

“யாம: ஸ்ரயதி யாம் தத்தே யைந யாத்யாய யாச்ச யா
யாஸ்ய மாநாய யை வாந்யா ஸா மாமவது பாதுகா’’

என்று பாதுகையானவள், எப்படி எல்லாம் ரங்கநாதப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்கிறாள் என்பதை, எந்த பாதுகையை ஸ்ரீரங்கநாதன் சஞ்சார காலத்தின் அடைகிறானோ, எந்த பாதுகையானவள் ரங்கநாதப் பெருமாளை தாங்குகிறாளோ, எந்த பாதுகையானவள் ரங்கநாதனுக்காகவே உள்ளாளோ, ரங்கநாதனிடமிருந்து தோன்றினாளோ, ஸ்ரீ ரங்கநாதனின் பூஜையின் போது சமர்ப்பிக்க படுகிறாளோ, ஸ்ரீரங்கநாதனிடமிருந்து பெற தக்கவளாக இருக்க கூடிய அந்த பாதுகை அடியேனை காக்க வேண்டும் என்கிறார் ஸ்வாமிதேசிகன்.

நம்மை அந்த ரங்கநாதப் பெருமாளிடம் சேர்த்து வைக்கும் பாதுகையானவள், தயை வடிவமாக இருந்து கொண்டு, அவளை நாம் எளிதில் அடையும் வண்ணம் இருக்கிறாள். ஒரு சில ஸ்லோகங்களை படித்தாலே, இப்படி எல்லாம் பாதுகையின் பெருமை பற்றி ஸ்லோகத்தை அருள முடியுமா என்று எண்ண தோன்றும். இந்த பத்ததியில் வரக்கூடிய 936 ஸ்லோகம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு:

“யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா
யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா’’
இந்த ஸ்லோகத்தை,
“யாயா யா ஆய ஆயாய அயாய அயாய அயாய அயாய அயாய
யாயாய ஆயாயாய ஆயாயா யா யா யா யா யா யா யா யா’’

என்று பிரித்து பொருள் கொண்டால், எந்த பாதுகையானவள், ஸ்ரீரங்கநாதனைச் சேர்ந்தவர்களின் லாபத்தின் பொருட்டு பாடுபடுகிறாளோ, எந்த பாதுகையானவள் ரங்கநாதனை அடைந்தவர்களின் சுபத்தை பொருட்டு உள்ளாளோ, எவள் சத் விஷயங்களின் மீது ஆர்வத்தை தூண்டும் படி உள்ளாளோ, எந்த பாதுகையானவள் ரங்கநாதனை நம்மிடம் அழைத்து வருவதற்காக இருக்கிறாளோ.. என்று பாதுகையின் பெருமையை பட்டியலிட்டுக்கொண்டே போகிறார் ஸ்வாமிதேசிகன். இனி 31வது பத்ததியான நிர்வேத பத்ததியின் வழி பாதுகையின் பெருமையை ஸ்வாமி தேசிகனோடு கொண்டாடுவோம்.

“அபி ஜந்மநி பாதுகே! பரஸ்மிந்
அநகை: கர்மபி ரீத்ருசோ பவேயம்
ய இமே விநயேந ரங்கபர்து:
ஸமயே த்வாம் பதயோ: ஸமர்பயந்தி’’

என்று கைங்கர்ய செல்வத்தை பாதுகையிடம் பிரார்த்திக்கிறார் ஸ்வாமி தேசிகன். பாதுகாதேவியே! உனக்கு கைங்கர்யம் செய்யும் பெரும் பாக்கியத்தை பெற்ற அர்ச்சக ஸ்வாமிகள் என்ன செய்கிறார்கள்? உன்னை அனைத்து வேளைகளிலும் ரங்கநாதப் பெருமாளின் திருவடியில் சாற்றி அழகு பார்த்து கொண்டிருக்கிறார்கள். ரங்கநாதப் பெருமாளின் திருவடிக்கு அழகு சேர்த்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஜென்மம் என்ற ஒன்றை நீ அடியேனுக்கு அருளும் போது, அந்த பிறவியில் இப்படிப்பட்ட கைங்கர்யம் செய்ய கூடிய அர்ச்சகராக அடியேனை பிறக்க வைப்பாயா? என்று கேட்கிறார்.

ஸ்வாமிக்கு பாதுகையின் மீது உள்ள அளப்பரியா ஈடுபாட்டை காட்டும் ஸ்லோகம் போல் அல்லவா இது அமைந்திருக்கிறது? பாதுகையை தாய் பசு போலவும், தன்னை கன்றுகுட்டி போலவும் சொல்லி, ஸ்வாமி தேசிகன், உலக விஷயங்களில் அதிகம் ஈடுபட்டு அதனால் ஒரு கன்று குட்டி போல உன்னை விட்டு அடியேன் தூர விலகி சென்றாலும், ஒரு தாய் பசுவானது எப்படி வாத்சல்யத்தால், தன் கன்றை தேடி அதன் இருப்பிடம் செல்லுமோ, அப்படி, தாயே.. என் மனம் என்பது வேறு சிந்தனைகளில் ஈடுபடும் போதும் நீ வாத்சல்யத்தால் அடியேனது மனதை உன் இருப்பிடமாக கொண்டு நீ மனதில், இருக்க வேண்டும் என்கிறார்.

இந்த பத்ததியில் வரக்கூடிய கடைசி ஸ்லோகம் நிச்சயம் படிப்பவர்களின் கண்களிலிருந்து கண்ணீரையே வரவழைத்துவிடும். பாதுகாவிடம் ஸ்வாமி தேசிகன் வைக்க கூடிய அந்த வேண்டுதல் இருக்கிறதே, தன்னை “பாதுகா சேவகன்” என்றே அந்த பெருமாளே அழைக்க வேண்டும் என்று,

“காலே ஜந்தூந் கலுஷகரணே க்ஷிப்ரமாகார யந்த்யா:
கோரம் நாஹம் யமபரிஷதோ கோஷ மாகர்ண யேயம்
ஸ்ரீமத்ரங்கேஶ்வர சரணயோர் அந்தரங்கை: ப்ரயுக்தம்
ஸேவாஹ்வாநம் ஸபதி ஸ்ருணுயாம் பாதுகா ஸேவகேதி

ஸ்ரீரங்கநாதனின் திவ்ய மணி பாதுகையே! அடியேனின் அந்திம காலத்தில் (உயிர் பிரியும் தருவாயிலில்), அடியேனது புலன்கள் கலங்கி ஓய்ந்துவிடும். அந்த சமயத்தில், எம கிங்கரர்கள் அடியேனது பெயரை சத்தமாக கூப்பிட்டு அடியேனை அழைத்து கொண்டு போக அவசரப்பட்டு போடும் கூச்சல் ஒலி அடியேனது காதில் விழாமல் இருக்க வேண்டும். மாறாக எந்த சப்தம் ஒலிக்க வேண்டும் தெரியுமா? ரங்கநாயகி தாயாருக்கும், ரங்கநாதப் பெருமாளுக்கும் கைங்கர்யம் செய்ய கூடியவர்கள் இனிமையான குரலில் வந்து, “அதோ அந்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகா சேவகனை அழைத்து வாருங்கள்” என்று சொல்ல கூடிய அருளிப்பாட்டை வெகு விரைவில் கேட்க வேண்டும் என்கிறார். நம்மையும் அப்படி அந்த பாதுகாதேவியே பாதுகா சேவக கோஷ்டியில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைப்போம்.

பாதுகா சஹஸ்ரத்தின் நிறைவான பத்ததியான பல பத்ததியில்,

“ஸக்ருதப்யநுபூய ரங்கபர்து:
த்வதுபஸ்லேஷ மநோஹரம் பதாப்ஜம்
அபுநர் பவகெளதுகம் ததைவ
ப்ரஸமம் கச்சதி பாதுகே முநீநாம்’’

என்று பாதுகையே, ரங்கநாதப் பெருமாளின் திருவடி தாமரைகளை நித்யம் அலங்கரிக்கும் உன்னை ஒரே ஒரு தடவை தரிசனம் செய்துவிட்டால் போதும். அப்படிப்பட்ட தரிசனம் கிடைக்கப்பெற்ற மறுபிறவியே வேண்டாம் என்று வேண்டும் முனிவர்கள்கூட, பாதுகையை மீண்டும் மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே மீண்டும் பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள் என்கிறார் ஸ்வாமிதேசிகன்.

பாதுகையின் பெருமை என்ற இந்த தொடருக்கு வேண்டுமானால் நம்மால் முற்றும் என்ற ஒரு வார்த்தையை சொல்ல முடியுமே தவிர, பாதுகையின் பெருமையை சொல்லி முடிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது. பாதுகாதேவி நம் அனைவருக்கும் சகல விதமான நலங்களையும், வளங்களையும் நிச்சயம் அருளுவாள்…நிறைந்தது…

நளினி சம்பத்குமார்

Tags : Ranganathan ,Kamadenu ,
× RELATED துவஜ யோகம்!