×

காகிதத்தில் என் கதைகள்!

நன்றி குங்குமம் தோழி

சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், பகுதி நேரப் பணியாளர், பல்வேறு விருதுகள் பெற்றவர் என இவை அனைத்திற்கும் சொந்தக்காரர்தான் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை முதுகலை மாணவி பிரபாவதி. இவரின் எழுத்து அவரின் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருப்பது குறித்து மனம் திறந்தார் பிரபாவதி.‘‘மதுரை, தேனூர்தான் என் பூர்வீகம். அப்பா தையல் பணி செய்கிறார், அம்மா துணி தேய்க்கும் வேலை பார்க்கிறார். அண்ணன் தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் உதவியாளராக பணிபுரிகிறார்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய கையெழுத்து அழகாக இருப்பதாகக் கூறி என் தமிழாசிரியர் பாராட்டினார். அதனால் என்னை பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள சொன்னார். அதற்கான பயிற்சியும் அளித்து வெற்றி பெறவும் செய்தார். பள்ளி அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சியளித்து, முதல் போட்டியிலேயே வெற்றி பெறவும் வைத்தார். அதுதான் என்னுடைய எழுத்துகளின் திருப்புமுனை என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை என் வகுப்பாசிரியர் ஏற்படுத்தித் தந்தார். +2வில் நல்ல மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க விரும்பினேன். ஆனால், பல முயற்சி செய்தும் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை.

தமிழில் அதிகளவு மதிப்பெண் பெற்றிருந்ததால், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் படிக்க விண்ணப்பித்தேன். என்னுடைய எதிர்காலம் தமிழ் தான் என்று முடிவானதால், அதில் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். என்னுடைய கல்லூரி வகுப்பாசிரியர் முனைவர் கவிதா, எந்தப் பாடமாக இருந்தாலும், புராணக் கதைகளை கூறுவார். நம் தாய்மொழி தமிழில் சிறப்புமிக்க புராணங்கள், காப்பியம், உரைநடை, செய்யுள், இலக்கணம் அனைத்தும் கதை வடிவில் அமைந்திருப்பதை உற்று நோக்கினால் தெரியும்’’ என்றவர், தமிழ் சார்ந்து எந்தப் போட்டிகள் வந்தாலும் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

‘‘போட்டிகளில் சமுதாயம் சார்ந்த தலைப்புகளை தான் தேர்ந்தெடுப்பேன். சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகள், அதனை முன்னேற்ற செய்வது, நிலை நிறுத்துதல் என என்னுடைய தனிப்பட்ட கருத்துகளை முன் வைப்பேன். பெரும்பாலும் அறியப்படாத செய்திகளை கூற விரும்புவேன். தமிழ்த்துறையில் நடந்த ‘பாரதியின் கவிதையில் அறிவியல் பார்வை’ என்னும் தலைப்பு என் கவனத்தை ஈர்த்தது. இது பற்றி பாரதியின் கவிதை புத்தகத்தில் ஆராய்ந்த போது, அறிவியல் வளர்ச்சி இல்லாத அவர் காலத்தில் வேதியியல், புவியியல், உயிரியல் என பல்வேறு துறை சார்ந்த கவிதைகளை படைத்திருந்தார். அதை நானும், என்னைச் சுற்றியுள்ளவர்களும் அறிய வேண்டும் என எண்ணினேன்.

அதை சிறுகதையாக கொடுக்க விரும்பினேன். துறைப் பேராசிரியர்கள் உதவியுடன், கதை எப்படி எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்து கொண்டேன். மேலும், என் தோழிகளும் அவர்களின் கருத்துகளை கூறினார்கள். இவர்களின் வழிகாட்டுதலின் மூலம் நான் சிறுகதை எழுதிேனன். அதற்கான பரிசும் கிடைத்தது. தற்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களை வைத்து பல கதைக்கரு என் மனதிலே உள்ளன. இந்த உணர்வே என்னை சிறுகதை எழுத்தாளராக ஒரு நம்பிக்கையை எனக்குள் விதைத்தது’’ என்றவர் தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுரைகள் எழுதி வெற்றியும் பெற்றுள்ளார்.

‘‘புத்தகங்கள் மட்டுமில்லாமல் இணையத்திலும் எனக்கு பெரிய அளவில் உதவின. சிறு வயதில் வாசிப்பு மீது ஏற்பட்ட ஈர்ப்பு, காலப்போக்கில் சிறுகதை, கட்டுரை எழுத வழிவகுத்தது. சிறுகதை எழுதும் போது இதுதான் முடிவு என்று எனக்கே தெரியாது. என்னுடைய கதாப்பாத்திரங்களே அதனை வழிநடத்தும். என்னுடைய கதைகள் பெரும்பாலும் சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை சார்ந்திருக்கும். இளம் தலைமுறையினருக்கு சிந்தனை திறன் அதிகம். அவர்கள் அதனை வளர்த்துக் கொண்டால், அற்புதமான படைப்புகளை உருவாக்க முடியும்’’ என்றார் பிரபாவதி.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்

Tags : Kungumam Dozhi Prabhavathi ,Sri Meenakshi Government College for Women ,Madurai ,
× RELATED சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!