சென்னை: திடீர் மின்கசிவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் புகைமூட்டம் சூழ்ந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2வின் இரண்டாவது தளத்தின் புறப்பாடு பகுதியில், தனியார் (சிங்கப்பூர்) ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் நேற்று மதியம் 12 மணியளவில், திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை மூட்டம் சூழ்ந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீயணைப்பான்களை பயன்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதனிடையே விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சென்னை விமான நிலையத்தின் 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநில அரசின் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து புகை மூட்டத்தில் சிக்கித் தவித்த பயணிகள், ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக புறப்பாடு விமான பயணிகளுக்கான போர்டிங் பாஸ்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. இதுகுறித்து, முழுமையாக விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சென்னை சர்வதேச முனையம், டெர்மினல் 2, புறப்பாடு பகுதியில் உள்ள விமான நிறுவனத்தின் அலுவலகத்தில், ஆவணங்கள் வைத்திருக்கும் ஸ்டோர் ரூமில், திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது. இதில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விமான சேவைகள் அனைத்தும், வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே பயணிகள் அச்சப்பட வேண்டியதில்லை. இந்த தீ விபத்து குறித்து முறையான விசாரணை நடைபெறும், என கூறப்பட்டிருந்தது.
இதனிடையே திடீர் மின்கசிவு காரணமாக, விமான நிறுவன அலுவலகத்தில் உள்ள பல்வேறு முக்கிய கோப்புகள், ஆவணங்கள் அனைத்தும், எரிந்து நாசமாக்கி விட்டதாகவும், விமான நிலைய ஊழியர்கள் இருவர் மயக்கம் அடைந்து, சென்னை விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், விமான நிலைய ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மின்கசிவு நாச வேலையா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
