×

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி மூதாட்டி உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சி, ஜன. 28: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் நேற்று கேனில் மறைத்து எடுத்து வந்த அரை லிட்டர் பெட்ரோலை தனது உடம்பில் ஊற்றி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த மாற்றுத்திறனாளி மூதாட்டியிடம் இருந்து பெட்ரோலை கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், வாணாபுரம் வட்டம் பாக்கம்புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மனைவி செல்வி (61) என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில், தனது மகன் தனசேகரன் பெயரில் நிலம் எழுதி கொடுத்ததாகவும் தற்போது தாய் மற்றும் தந்தையை பராமரிக்காமல் இருந்து வருவதால், நாங்கள் இருவரும் சிரமப்பட்டு வருகிறோம். தாய், தந்தையை பராமரிக்காத மகனிடம் உள்ள நிலத்தின் ஆவணங்களை ரத்து செய்து கொடுக்க வேண்டி வருவாய்த்துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், மூதாட்டியிடம் இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது எனவும் அதிகாரிகளிடம் முறையிடுமாறு அறிவுறுத்தி அந்த மாற்றுத்திறனாளி மூதாட்டியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Kallakurichi ,District Disabled Welfare Officer ,Kallakurichi District ,
× RELATED பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா