ஓமலூர், ஜன. 28: ஓமலூர் ேபாலீஸ் ஸ்டேஷன் முன் தன்னையும், தனது மகனையும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இளம்பெண் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி பாலிகாட்டை சேர்ந்தவர் மாரியம்மாள் (37). இவரது மகன் கார்த்தி, அங்கு வழக்கமாக விளையாடும் மைதானத்திற்கு கைப்பந்து விளையாட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த, அதேபகுதியை சேர்ந்த லோகநாதன் (26), வீரமணி ஆகிய இருவரும் கார்த்தியை பார்த்து நீயெல்லாம் இங்கு விளையாட கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதையறிந்து அங்கு சென்ற மாரியம்மாளையும், கார்த்தியையும் இருவரும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இதனால், காயமடைந்த கார்த்திக், மாரியம்மாள் இருவரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தவறு செய்த லோகநாதனுக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுவதாகவும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் கூறி, போலீஸ் ஸ்டேஷன் முன் வந்த மாரியம்மாள், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டு தீ குளிக்க முயன்றார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை தடுத்து, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லோகநாதனும் அரசு மருத்துவமனையில் சேர்ந்து மாரியம்மாள் தரப்பினர் தாக்கிவிட்டதாக கூறி, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர்.
