செங்கல்பட்டு, ஜன.28: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நவீன சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு நகரின் மிக முக்கிய சந்திப்பான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் நான்கு வழிச் சாலை இணையும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் என்பது ஜி.எஸ்.டி சாலை, காஞ்சிபுரம் சாலை மற்றும் நகரின் உட்புறச் சாலைகள் இணையும் மிக முக்கியமான இடமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் சூழல் நிலவி வந்தது.
எனவே நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்பேரில், நீண்ட நாள் கோரிக்கையான தானியங்கி சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணி தற்போது போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. அதன்படி, இந்த சிக்கலுக்குத் தீர்வுகாணும் வகையில், நான்கு வழிச் சாலை சந்திப்பில் வாகனங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் நவீன சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் சாலைகள் தெளிவாகத் தெரியும் வகையில் உயர்தர எல்.இ.டி விளக்குகள் பிரகாசமாக எரியும் வகையில் பொருத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
