செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர் பகுதியான வேதாசலம் நகரில் கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இந்து சமய அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோயிலில் கோதண்டராமர் கருடாழ்வார், அகோபிலவள்ளி தாயார், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சந்நிதானங்கள் அமைந்துள்ளன. இங்கு புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் வடக்கு பக்கம் திருக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் நீரைக்கொண்டுதான் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வந்தது. அதேபோல இந்த குளத்தையொட்டி நாலாபுறமும் மதில் சுவர் அமைத்து குளத்தில் இறங்கும் வகையில் கருங்கல்லிலான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த திருக்குளத்தை முறையாக பராமரிக்காமலும், பயன்படுத்தாமலும் இருப்பதால் இரவு நேரங்களில் தடுப்புச்சுவரில் ஏறிக் குதித்து குளத்தைச் சுற்றி அமர்ந்து சமூக விரோதிகள் மது அருந்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் தெப்பல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 30 ஆண்டுகளாக தெப்பத்திருவிழாவே கொண்டாடப்படவில்லை. சிறப்பு வாய்ந்த இந்த திருக்குளத்தில் வரும் ஆண்டிலாவது தெப்பத்திருவிழா நடத்திட வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
