×

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

* ஜவுளி, கடல்சார் பொருட்கள், தோல், காலணிகள், நகைகள், விளையாட்டு பொருள்
ஏற்றுமதிக்கு 0% வரி, இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள், மது வகைகளுக்கு விலை குறையும்

புதுடெல்லி: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், கடல்சார் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி அடியோடு ரத்தாகிறது. அதேநேரத்தில் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், ஒயின் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட உள்ளது.

மொத்தம் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சிகளை கடந்த 2007ம் ஆண்டு தொடங்கியது. பல்வேறு விவகாரங்களில் வேறுபாடுகள் காரணமாக 2013ல் இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 2020ம் ஆண்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்கது: இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்களான உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் அன்டோனியோ கோஸ்டா ஆகியோருடன் உச்சிமாநாட்டுப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல.

இருதரப்பு செழுமைக்கான புதிய வரைபடம். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை ஒட்டுமொத்த உலகிற்கும் உதவும்’’ என்றார். அனைத்து ஒப்பந்தங்களின் தாய்: ஐரோப்பிய கவுன்சில் தலைவர் கோஸ்டா கூறுகையில், ‘‘வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் போன்ற துறைகளில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன. இன்றைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இதுவரை செய்யப்பட்ட மிகவும் அற்புதமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும்’’ என்றார். ஐரோப்பிய ஆணைய தலைவர் வான் டெர் லேயன் கூறுகையில், ‘‘நாங்கள் அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாயான ஒப்பந்தத்தை வழங்கி உள்ளோம். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு ஈடுபாட்டின் ஒட்டுமொத்த பாதையை கணிசமாக விரிவுபடுத்தும். பல துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை திறக்கும்’’ என்றார்.

* கிடைக்கக்கூடிய நன்மைகள்:
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், கடல்சார் பொருட்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக், ரப்பர், தோல், காலணிகள், அடிப்படை உலோகங்கள், ரத்தினங்கள், நகைகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றுக்கான வரி முற்றிலும் நீக்கப்படும். தற்போது, இந்தத் துறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் 0 முதல் 26 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படுகின்றன.

* ஆட்டோமொபைல் மற்றும் எஃகு தவிர, இந்தியாவிலிருந்து வரும் கிட்டத்தட்ட அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் (93 சதவீதத்திற்கும் மேல்) ஐரோப்பிய ஒன்றியத்தில் பூஜ்ஜிய வரி அனுமதி கிடைக்கும். மீதமுள்ள 6 சதவீதத்திற்கும் மேலான பொருட்களுக்கு, வரி குறைப்பு மற்றும் ஒதுக்கீட்டின் அடிப்படையிலான வரிச் சலுகைகளை (ஆட்டோமொபைல்கள் போன்ற பொருட்களுக்கு) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும்.

* ஐரோப்பிய ஒன்றியத்தின் கார்கள் மற்றும் ஒயின்களுக்கு இந்திய சந்தையில் சலுகை வரி விகிதங்கள் வழங்கப்படும். இதன் மூலம் அவற்றின் விலைகள் குறையும். ஐரோப்பிய ஒன்றிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் உயர்தர அதிக விலை கொண்ட கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த அனுமதிப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் அத்தகைய கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கும் வாய்ப்புகளைத் திறக்கும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி வாகனங்களுக்கும் வாய்ப்புகளைத் திறந்துவிடும்.

* இந்திய ஏற்றுமதிகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னுரிமை நுழைவை பெறும். இது மிகப்பெரிய வளர்ச்சி சாத்தியங்களுக்கு வழிவகுக்கும்.

* சேவைகள் துறையில், ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு சிறந்த சலுகயை வழங்கியுள்ளது. மொத்தமுற்ற 155 துணைத் துறைகளில் 144 துறைகளில் கால் பதிக்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இந்தியாவும் அவர்களுக்கு 102 துணைத் துறைகளைத் திறந்துவிடுகிறது.

* ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி வரி சுமார் 3.8 சதவீதமாக உள்ள நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு 0.1 சதவீதமாகக் குறைக்கப்படும்.

* ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உயர் தொழில்நுட்ப சேவைகளையும் முதலீடுகளையும் இந்தியாவிற்கு கொண்டு வரும், இதன் விளைவாக இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.

* பாரம்பரிய மருத்துவ நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்படாத ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், இந்திய பாரம்பரிய மருத்துவப் பயிற்சியாளர்கள் தங்கள் சொந்தப் பெயரில் பணிபுரிவதற்கான அணுகலை இந்தியா பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 27 நாடுகளைக் கொண்ட அந்த கூட்டமைப்பிற்கு இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். இது இந்திய ஏற்றுமதியை பன்முகப்படுத்தப்படும் ஒன்றிய அரசின் நடவடிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து, பெண்கள், கைவினைஞர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மாணவர்களின் இடப்பெயர்வு தொடர்பான உறுதிமொழிகளும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன. படிப்புக்குப் பிந்தைய பணி விசாக்கள் தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து சில உறுதிமொழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுவதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஒயின் விலை குறையும்
இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய ஒயின்களுக்கான வரி 150 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறையும் (விலையுயர்ந்த ஒயின்களுக்கு). இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதன் மூலம் ஐரோப்பிய ஒயின்களின் விலை இந்தியாவில் குறையும். 2.5 யூரோக்களுக்கும் குறைவான விலை கொண்ட ஒயின்களுக்கு எந்த வரிச் சலுகைகளும் இருக்காது. இந்திய ஒயின்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் வரிச் சலுகைகள் கிடைக்கும்.

* இருதரப்பு வர்த்தகம்
2024-25 நிதியாண்டில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் மொத்தப் வர்த்தகம் சுமார் 136 பில்லியன் டாலர். இதில் ஏற்றுமதி 76 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 60 பில்லியன் டாலராகவும் இருந்தது. 2004ம் ஆண்டு முதல் இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் நெருங்கிய வர்த்தக உறவு கொண்ட நாடுகளாக உள்ளன.

* 19வது வர்த்தக ஒப்பந்தம்
இது இந்தியாவின் 19வது வர்த்தக ஒப்பந்தம். 2014 மேற்கொள்ளப்பட்ட 8வது வர்த்தக ஒப்பந்தம். 2021ல் மொரீஷியஸ், 2022 டிசம்பரில் ஆஸ்திரேலியா, 2022 மே மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம், 2025 டிசம்பரில் ஓமன், 2025 ஜூலையில் இங்கிலாந்து, 2025 அக்டோபரில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டைன், நார்வே நாடுகள் கொண்ட அமைப்பு) ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2025ல் நியூசிலாந்துடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

* சலுகை இல்லாத பொருட்கள்
இந்த ஒப்பந்தத்தில், உள்நாட்டு விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, பால் பொருட்கள் (சீஸ் உட்பட), சோயா மாவு மற்றும் தானியங்கள் துறைகளில் இந்தியா எந்த வரிச் சலுகைகளையும் வழங்காது. அதே போல, ஐரோப்பிய ஒன்றியமும் சர்க்கரை, மாட்டிறைச்சி, இறைச்சி மற்றும் கோழிப் பண்ணைத் துறைகளைப் பாதுகாக்கிறது.

* சொகுசு கார்கள் விலை குறையும்
அடுத்த ஆண்டு முதல் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், லம்போர்கினி, போர்ஷே மற்றும் ஆடி போன்ற பிரீமியம் சொகுசு ஐரோப்பிய கார்கள், இந்திய சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா ஒதுக்கீட்டின் அடிப்படையில் இறக்குமதி வரிச் சலுகைகளை வழங்க உள்ளது. தற்போது, ​​வாகனத் துறையில் இந்தியாவின் இறக்குமதி வரி 66 சதவீதம் முதல் 125 சதவீதம் வரை உள்ளது. இந்தியாவின் வாகன உற்பத்தி துறை பெரும்பாலும் சிறிய கார்களால் (ரூ. 10 லட்சம் – ரூ. 25 லட்சம்) ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இது வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே, ரூ.25 லட்சத்திற்கு அதிகமான ஐரோப்பிய கார்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் அவர்களின் உற்பத்தி தளங்களை அமைக்கவும் ஒப்பந்தத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் முன்னணி கார் நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும் வாய்ப்புள்ளது.

* ஒப்பந்தங்களின் தாய் என்பது ஏன்?
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் உலகின் அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என புகழப்படுவது ஏன் என வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
* இது உலகம் முழுவதும் நடந்த மிகப்பெரிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.

* சீனா-ஆசியான் வர்த்தக ஒப்பந்தமும் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்று. ஆனால் ஆசியான் என்பது 10 வெவ்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு. அவை ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல ஒரு சுங்க ஒன்றியமாக இல்லை. ஆசியான் நாடுகளுடனும் இந்தியா தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

* இந்த ஒப்பந்தம் தோராயமாக 190 கோடி மக்களை (இந்தியாவில் 140 கோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 50 கோடி) சென்றடைகிறது.

* உலகின் 4வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவும், 2வது பெரிய பொருளாதாரமான ஐரோப்பிய ஒன்றியமும் உலகப் பொருளாதாரத்தில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளன. உலகின் மக்கள் தொகையில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

* 2024ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்தப் பொருட்கள் இறக்குமதி 6.9 டிரில்லியன் டாலர். அதன் சேவைகள் இறக்குமதி 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர். 2024ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த இறக்குமதி சுமார் 750 பில்லியன் அமெரிக்க டாலர். இவை இரண்டும் சேர்ந்து உலக வர்த்தகத்தில் 11 முதல் 12 சதவீதம் வரை பங்களிக்கின்றன.

* மொத்த உலக வர்த்தகமான 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 11 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என புகழப்படுகிறது.

Tags : India ,Modi ,New Delhi ,European Union ,
× RELATED U19 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே அணியை...