- திண்டுக்கல்
- சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலை
- மத்திய அமைச்சர் ஷ்.
- வெங்கடேசன்
- மதுரை
- அமைச்சர்
- நிதின் கட்ட்கரி
- வெங்கடேசன் எம்.
மதுரை: நான்கு வழிச்சாலையாக உள்ள திண்டுக்கல் – சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை (DPR) கோருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் நிதின் கட்கரி-க்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் – சமயநல்லூர் இடையிலான சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. சு. வெங்கடேசன் எம் பி யின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். திண்டுக்கல் முதல் சமயநல்லூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை (NH-44) பகுதியை 4 வழிகளிலிருந்து 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்த தேவை குறித்து கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், திண்டுக்கல் – சமயநல்லூர் இடையிலான சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அமைச்சரின் பதில்:
அது குறித்து அமைச்சர் நிதின் கட்கரி தற்போது அளித்துள்ள பதிலில்
“திண்டுக்கல் – சமயநல்லூர் இடையிலான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றுவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான பணிகளைத் தொடங்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம்
* தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.
* விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு பயண நேரம் மிச்சமாகும்.
* வணிக ரீதியிலான போக்குவரத்து மேம்படும்.
எனவே “எனது முக்கியமான கோரிக்கையை ஏற்ற அமைச்சருக்கு நன்றி. விரிவான திட்ட அறிக்கையை தொடர்ந்து திட்டத்திற்கான நிதியை தாமதமின்றி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என சு. வெங்கடேசன் எம் பி தெரிவித்துள்ளார்.
