- எகனாபுரம்
- பரந்தூர் விமான நிலையம்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மாவட்டம்
- பரந்தூர் விமான நிலையம்
- பரந்தூர் சர்க்யூட்டாரா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் 17வது முறையாக தீர்மானம் நிறைவேற்றி, தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக கிராமப்புறங்களில் நிலம் எடுப்பு பணிகளை மேற்கொண்டு, நில உரிமையாளர்களிடம் பத்திரப்பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், குடியிருக்கும் வீடுகளை வழங்கும் கிராம மக்களுக்கு வழங்குவதற்கு, மாதிரி வீடுகளும் கட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, தங்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் எனக்கூறி கிராம மக்கள் 1100 நாட்களாக தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல், முழுவதும் பாதிக்கப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், 6 முறை கிராம சபை கூட்டங்களை புறக்கணித்தும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தும், 16 முறை கிராமசபை கூட்டத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து, தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு தொடுத்து சட்டப் போராட்டத்தையும் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த வகையில், ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சிகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் முன்னிலையில் 17வது முறையாக கிராம சபை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

