×

சமூக வலைதளங்களில் பதிவிடுவோரின் சில வார்த்தைகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது : நீதிபதி வேதனை!!

மதுரை : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக பிரமுகர் சுரேஷ்குமாரின் மோசமான பதிவு அதிர்ச்சி அளிக்கிறது என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பாஜக பொருளாதாரப் பிரிவு மாவட்ட துணைத் தலைவரான சுரேஷ் குமார், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேஸ்புக்கில் எதிர்க்கருத்து தெரிவித்தவரின் 16 வயது மகளின் புகைப்படத்தை எடுத்து ஆபாச கருத்துக்களுடன் விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சுரேஷ் குமார் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஜாமின் கோரி சுரேஷ் குமார் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக பிரமுகர் சுரேஷ்குமாரின் மோசமான பதிவு அதிர்ச்சி அளிக்கிறது. சமூக வலைதளங்களில் பதிவிடுவோரின் சில வார்த்தைகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. சாதாரணமாக யாரும் இதுபோன்ற வார்த்தைகளை பேச துணிய மாட்டார்கள். சமூக ஊடகங்களின் இந்த தீமையைப் பற்றி நீதிமன்றம் வேதனையுடன் பதிவு செய்கிறது. எனினும், அவர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு, இனி இதுபோன்று வார்த்தைகளை பயன்படுத்தமாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Tags : Madurai ,BJP ,Suresh Kumar ,Thirupparangundaram ,District Vice President ,BJP Economic Division ,Kanyakumari District ,Marthanda ,Facebook ,Thiruparangundaram ,
× RELATED குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்:...