நடப்பாண்டின் முதலாவது விண்வெளி ஆய்வுத்திட்டமான பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. புவி கண்காணிப்புக்காக ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு EOS-N1 செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த செயற்கை கோள், பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம், ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இது, ஒன்றரை நிமிடம் தாமதமாக விண்ணில் பாய்ந்தது. இது, இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய முதலாவது ராக்கெட்டாக அமைந்தது. EOS-N1 செயற்கைக்கோளுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மேலும் 14 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
இதில், சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஆர்பிட் எய்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தயாரித்த ‘ஆயுள்சாட்’ என்ற செயற்கைகோளும் அடக்கம். இந்த செயற்கை கோள்களை 512 கிலோ மீட்டர் தொலைவில், SSO எனப்படும் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராக்கெட் விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் அதன் இலக்கை அடையாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், ராக்கெட்டின் மூன்றாவது நிலையில் இடையூறு ஏற்பட்டதாகவும், ராக்கெட் அதன் பாதையை விட்டு விலகியதாகவும் தெரிவித்தார். ராக்கெட்டில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் இரண்டு நிலைகள் வெற்றிகரமாக செயல்பட்டாலும், திட எரிபொருளை கொண்ட மூன்றாவது நிலையில் கோளாறு ஏற்பட்டது.
மூன்றாவது நிலை இன்ஜின் எரிய தொடங்கிய சில வினாடிகளில், எரிபொருள் அறையில் அழுத்தம் திடீரென குறைந்தது. அழுத்தம் குறைந்ததால், ராக்கெட்டை தள்ளுவதற்கு தேவையான விசை கிடைக்கவில்லை. இதனால் ராக்கெட்டின் வேகம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இருந்தது. ராக்கெட்டின் திசையை நிலைநிறுத்தும் Flex Nozzle Control அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மூன்றாவது நிலையின்போது ராக்கெட் தனது அச்சில் இருந்து விலக தொடங்கியது. இதனை சரிசெய்ய வேண்டிய தானியங்கி மென்பொருள், ராக்கெட்டின் வேக குறைவால் செயலிழந்தது. இதன் விளைவாக ராக்கெட் ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் சுழல தொடங்கியது. ராக்கெட்டின் வேகம் வினாடிக்கு சுமார் 7.5 கிலோ மீட்டராக இருக்கவேண்டும்.
ஆனால் இந்த தொழில்நுட்ப கோளாறால் வேகம் வினாடிக்கு 5 கிலோ மீட்டராக குறைந்தது. வேகம் குறைவாக இருந்ததால், EOS-N1 செயற்கைக்கோளை திட்டமிட்ட புவி வட்டப்பாதையில் செலுத்த முடியவில்லை. இஸ்ரோவின் தோல்வி பகுப்பாய்வு குழு, தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்து வருகிறது. கடந்த ஆண்டு, ஏவப்பட்ட PSLV-C61 ராக்கெட்டிலும், இதே மூன்றாவது நிலைதான் சிக்கலை ஏற்படுத்தியது. எனவே, இந்த குறிப்பிட்ட பாகத்தின் தயாரிப்பு முறையில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயப்பட உள்ளது. இந்த தோல்வியால் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த ராக்கெட் ஏவுதல்கள் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளது.
